காட்டுக்குள் மது அருந்தி விட்டு 40 வயது பெண்ணுடன் உல்லாசம்: பணம் கேட்டதால் அடித்து கொன்ற 3 வாலிபர்கள்
பின்னர் நான்கு பேரும் ஒன்றாக மது அருந்திவிட்டு வாலிபர்களுடன் அவர் உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த தபால்மேடு அருகேயுள்ள குண்டியல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரது மனைவி அம்பிகா (40). இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு குண்டியல்நத்தம் வனப்பகுதியில் சடலமாக கிடந்துள்ளார். அம்பிகாவின் இறப்பில் சந்தேகம் அடைந்த அவரது மகள் நந்தினி பர்கூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அங்கு வந்த பர்கூர் போலீசார் அம்பிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த இறப்பு சம்பவம் குறித்து பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அம்பிகாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு சுமார் 30 அடி தூரத்தில் உடைந்த நிலையில் கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரது செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புக்களை ஆய்வு செய்தனர். அதில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவரது மகன் ஏழுமலை செல்போனில் கடைசியாக அம்பிகாவிடம் பேசியுள்ளது தெரியவந்தது.
அதனால் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த ஏழுமலையை கைது செய்து விசாரணை செய்தனர். அப்பொழுது ஏழுமலை அம்பிகாவிடம் பலமுறை பாலியல் உறவில் இருந்து வந்தது தெரியவந்தது. அதற்காக அம்பிகாவிடம் பணம் கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இந்தநிலையில் கடந்த 4-ம் தேதி மாலை ஏழுமலை அவரது நண்பர்கள் கோவிந்தராஜ் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் மது அருந்திவிட்டு அம்பிகாவிற்கு போன் செய்து குண்டியல்நத்தம் காப்புக் காட்டுக்கு வர சொல்லியுள்ளனர்.
அப்பொழுது அம்பிகா தனக்கும் மது வாங்கி வர சொல்லியுள்ளார். பின்னர் நான்கு பேரும் ஒன்றாக மது அருந்திவிட்டு வாலிபர்களுடன் அவர் உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அம்பிகா பணம் கேட்டுள்ளார். அதற்கு பணம் இல்லை என ஏழுமலை கூறவே இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியடைந்த அம்பிகா, ஏழுமலையின் செல்போனை பிடுங்கிக் கொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை மற்றும் அவரது நண்பர்கள் அம்பிகாவை பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அம்பிகா அங்கேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அம்பிகாவை அங்கேயே போட்டு விட்டு மூவரும் ஓடி தலைமறைவாகியுள்ளனர். இந்த விவரங்களை மூவரிடமும் விசாரித்து உறுதி செய்து கொண்ட போலீஸார் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.