இந்து முன்னணி தலைவர் உள்பட 400 பேர் கைது
கனல் கண்ணன் கைதை கண்டித்து திருப்பூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணி மாநில தலைவர் உள்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சினிமா ஸ்டண்டு மாஸ்டர் கனல் கண்ணனை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதனை கண்டித்து தமிழக முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கண்டனம்
ஆர்ப்பாட்டத்தின்போது கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனடியாக அவரை விடுதலை செய்யக் கோரியும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெற்று வருவது காட்டு தர்பார் ஆட்சி. நெருக்கடி நிலையின்போது கூட இப்படி ஒரு மோசமான ஆட்சி நடைபெறவில்லை. இந்து அமைப்பினர் மீது கைது நடவடிக்கை, பொய் வழக்கு போடுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவல்துறையினரும் ஒரு சார்பாக நடந்து கொள்கின்றனர். இந்துக்கள் குறித்து தவறாக பேசுபவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் கடவுளை மறுப்பவரின் சிலை கோவில் முன்பு இருக்க வேண்டுமா என கேட்ட கனல் கண்ணன் பயங்கரவாதியை போல இரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
400 பேர் கைது
கனல் கண்ணனின் கருத்தை இந்து முன்னணி முழுமையாக ஆதரிக்கிறது. எனவே கனல் கண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்பட இந்து முன்னணி அமைப்பினர் 400 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.