10 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.400 கோடியில் வீடுகள்
வீடுகள் இல்லாத 10 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.400கோடியில் வீடுகள் கட்டப்பட இருப்பதாக நலவாரிய தலைவர் பொன் குமார் தெரிவித்தார்.
பாதுகாப்பு உபகரணங்கள்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில்
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் கூட்டமைப்பு தலைவர் நாகேந்திரன் தலைமை வகித்தார். உதவி ஆணையர் ரவிஜெயராம் வரவேறறார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன் குமார் கலந்து கொண்டு கொத்தனார், பெயிண்டர், தச்சர், வெல்டர் என 2,996 தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
ரூ.400 கோடியில் வீடுகள்
தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பதவியேற்று இதுவரையில் 5 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.480 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கட்டுமான நல வாரியத்தில் 21 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுமான தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு வருடத்திற்கு 10 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.400 கோடி மதிப்பீட்டில் வீடு கட்ட உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி வீடு இல்லாத தொழிலாளிகளுக்கு 828 சதுர அடியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டி தரப்படும். மேலும் கட்டுமான தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், கட்டுமான உறுப்பினர்களாக பதிவு செய்ய எளிமையான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கண்காணிப்பாளர் கலைக்குமார், உதவியாளர் முனோவர்சரிவ், கட்டுமான சங்க தலைவர்கள் சிவராஜ், பூபதி உள்ளிட்ட 21 சங்கங்களைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் கூட்டமைப்பு நலவாரிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்..