திருச்சி மாவட்டத்தில் திருட்டுப்போன 400 செல்போன்கள் மீட்பு
திருச்சி மாவட்டத்தில் திருட்டுப்போன 400 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதனை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஒப்படைத்தார்.
திருச்சி மாவட்டத்தில் திருட்டுப்போன 400 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதனை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஒப்படைத்தார்.
செல்போன்கள் மீட்பு
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து திருட்டுப்போன மற்றும் தவறவிட்ட செல்போன்களை மீட்டுதரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். இந்த புகார்கள் குறித்து மாவட்ட சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை திருட்டுப்போன மற்றும் பொதுமக்களால் தவறவிடப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 400 செல்போன்களை சைபர்கிரைம் போலீசார் மீட்டனர். இந்த செல்போன்களை உரியவர்கள் சிலரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் நேற்று ஒப்படைத்தார். அப்போது சைபர்கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பால்வண்ணநாதன் உடன் இருந்தார். மீதமுள்ளவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் செல்போன்களை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
நடப்பாண்டில் அதிகம்
இது குறித்து சைபர்கிரைம் போலீசார் கூறுகையில், `மீட்கப்பட்ட செல்போன்களில் 10 சதவீதம் தவறவிடப்பட்டவையாகும். மீதமுள்ள செல்போன்கள் திருட்டுப்போனவை. அந்த செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டால் கண்டுபிடிக்க முடியாது.
சில காலத்துக்கு பிறகு, அந்த செல்போன்களை யாராவது விலைக்கு வாங்கி பயன்படுத்துவார்கள். அவர்களிடம் இருந்து செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் நடப்பாண்டில் தான் திருட்டுப்போன செல்போன்கள் அதிகஅளவில் மீட்கப்பட்டுள்ளன' என்றார்.