287 பயனாளிகளுக்கு ரூ.4.19 கோடியில் நலத்திட்ட உதவிகள்
287 பயனாளிகளுக்கு ரூ.4.19 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு பேசுகையில், முதல்-அமைச்சர் ஒவ்வொரு நாளும் ஏழை, எளிய மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். சட்டசபையில் 2 முறை ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டது. மக்கள் நலனில் உறுதியாக இருந்த காரணத்தினால் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அமலுக்கு கொண்டு வரப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதினால் இந்தியாவில் நம்பர் ஒன் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் விளங்கி வருகிறார், என்றார்.
பின்னர் வருவாய்த்துறையின் சார்பில் ரூ.47 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலும், வருவாய் துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பிலும், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சார்பில் ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்து 960 மதிப்பிலும், வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.94 லட்சத்து 5 ஆயிரத்து 773 மதிப்பிலும், தோட்டக்கலைத் துறை சார்பில் ரூ.3 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலும், மகளிர் திட்டம் சார்பில் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.1 கோடியே 57 லட்சத்து 79 ஆயிரத்து 62 மதிப்பிலும் என பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் மொத்தம் 287 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 18 லட்சத்து 84 ஆயிரத்து 738 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி (ஆலத்தூர்), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), வேளாண்மை இணை இயக்குனர் சங்கர்.எஸ்.நாராயணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.