விவசாயி வீட்டில் 42 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு


விவசாயி வீட்டில் 42 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு
x

அணைக்கட்டு அருகே விவசாயி வீட்டில் 42 பவுன் நகை, ரூ.1 லட்சம் மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும் அடுத்தடுத்த வீடுகளிலும் திருடி உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்

அணைக்கட்டு

அணைக்கட்டு அருகே விவசாயி வீட்டில் 42 பவுன் நகை, ரூ.1 லட்சம் மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும் அடுத்தடுத்த வீடுகளிலும் திருடி உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி

அணைக்கட்டு அருகே கெங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 48), விவசாயி. இவருக்கு மனைவி, ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

இவரது வீட்டில் பெற்றோர் உள்பட 6 பேர் வசித்து வருகின்றனர். நேற்று இரவு முன்பக்கம் மற்றும் பின்பக்கம் கதவுகளை பூட்டிவிட்டு தூங்க சென்றனர். பாஸ்கரன், மனைவி மற்றும் அவரது பிள்ளைகள் ஒரு அறையிலும் பெற்றோர் ஹாலிலும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அதிகாலை 4 மணிக்கு பாஸ்கரன் மயக்க நிலையில் எழுந்தார். அவரது பெற்றோர் கண் விழிக்காததால் அவர்களை எழுப்ப முயன்றார். அவர்களும் மயக்கமாக உள்ளது என கூறினர்.

வீட்டின் பின்பக்கம் உள்ள கதவு பூட்டிய நிலையில் இருந்தது. அந்த கதவு திறக்கப்படவில்லை. ஆகவே முன்பக்க கதவைத் திறந்து வெளியே வந்து பின்பக்க கதவைத் திறந்தார். பின்னர் பெற்றோர் படுத்துக் கொண்டிருந்த எதிர் அறை திறந்து கிடந்ததை பார்த்தார்.

நகை, பணம் திருட்டு

உடனே அனைவரையும் தட்டி எழுப்பி உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நகை பெட்டியையும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வைத்திருந்த பணப்பையையும் காணவில்லை. மா்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

மேலும் அருகில் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மணி என்பவரது வீட்டின் உள்ளே நுழைந்த மர்மநபர்கள் வீட்டின் கதவுகளை உடைக்க முடியாமலும் பக்கத்து வீட்டில் இருந்த பன்னீர்செல்வம் என்பவரின் வீட்டில் உள்ளே சென்று பூஜை அறையில் இருந்த அம்மன் தாலி சரடை திருடி செல்லாமல் சென்றுள்ளனர்.

மேலும் கெங்கநல்லூரில் 4 வீடுகளிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். பாஸ்கரன், மணி, பன்னீர்செல்வம் ஆகியோர் அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

மயக்க மருந்து

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

பாஸ்கரன் வீட்டில் நகைப்பெட்டியில் இருந்த 42 பவுன் நகைகளும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரமும், ஒரு கிலோ வெள்ளி பொருட்களையும் மர்மநபர்கள் திருடி சென்று உள்ளனர்.

மேலும் மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.7 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.1½ லட்சம் உள்ளிட்ட 3 ரொக்க பத்திரங்களும் திருட்டு போய் உள்ளது. முன்பக்க வாசல் வழியாக மர்ம நபர்கள் வீட்டுக்குள் வந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது மயக்க மருந்து தெளித்துவிட்டு பின்பக்க வாசல் வழியாக திருடி சென்று உள்ளனர்.

பன்னீர்செல்வம் என்பது வீட்டில் திருடும்போது 2 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். மேலும் கெங்கநல்லூர் பகுதியில் இருக்கும் 4 வீடுகளில் திருட்டு நடந்துள்ளது.

ஒரே இரவில் 7 வீடுகளுக்கு மேல் 8 பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளனர். நள்ளிரவு 12 மணி முதல் 2 மணி வரை இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story