விதிகளை மீறி மீன்பிடிப்பில் ஈடுபட்ட 420 பேருக்கு ரூ.80 லட்சம் அபராதம்
விதிகளை மீறி மீன்பிடிப்பில் ஈடுபட்ட 420 பேருக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.
விதிகளை மீறி மீன்பிடிப்பில் ஈடுபட்ட 420 பேருக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.
குறை தீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீனவர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள், மீன்வளம் மீனவர் நலத்துறை துணை இயக்குனர், உதவி இயக்குனர்கள், மீனவ கூட்டுறவு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசியதாவது:-
ரூ.80 லட்சம் அபராதம்
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் முறை எளிதாக்கப்பட்டு உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமான இரட்டைமடி மற்றும் சுருக்குமடி மீன்பிடிப்புகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சேதமடைந்த படகுகளுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடலில் ரோந்து பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு கடல்சார் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்ட விதிமுறைகளை மீறி மீன்பிடிப்பில் ஈடுபடுபவர்கள் மீது இந்த ஆண்டு மட்டும் 420 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்கள் பயன்படுத்தும் வகையில் சுகாதார கழிப்பறை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், ராமேசுவரம் துணை சூப்பிரண்டு உமாமகேஸ்வரி, மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் அப்துல் காதர் ஜெய்லானி, கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.