குமரியில் தொடர் மழை குளச்சலில் 42.6 மில்லி மீட்டர் பதிவு


குமரியில் தொடர் மழை குளச்சலில் 42.6 மில்லி மீட்டர் பதிவு
x
தினத்தந்தி 16 Sept 2023 12:45 AM IST (Updated: 16 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் குளச்சலில் 42.6 மில்லி மீட்டர் பதிவானது. மேலும், திற்பரப்பு அருவியில் ‘குளு குளு’ சீசன் நிலவுகிறது.

கன்னியாகுமரி

திருவட்டார்:

குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் குளச்சலில் 42.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. மேலும், திற்பரப்பு அருவியில் 'குளு குளு' சீசன் நிலவுகிறது.

மழை

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் நெல் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல நேற்று முன்தினமும் பல இடங்களில் மழை பெய்தது.

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், கொட்டாரம், மயிலாடி, தக்கலை, குளச்சல், பூதப்பாண்டி உள்ளிட்ட இடங்களில் மாலையில் பெய்ய தொடங்கிய மழை இரவு முழுவதும் பெய்தது. சில நேரம் சற்று பலத்த மழையாகவும், சில நேரம் சாரல் மழையாகவும் மாறி மாறி பெய்தது. இதனால் இரவில் கடும் குளிர் நிலவியது.

திற்பரப்பு அருவி

இதுபோல் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணை பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் மழை பெய்தது. கோதையாறு மலைப்பகுதியில் பெய்த மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த வாரம் வரை அருவியில் குறைவான அளவு தண்ணீர் பாய்ந்ததால் சுற்றுலா பயணிகள் திருப்தி இன்றி குளித்துச்சென்றனர். அத்துடன் திற்பரப்பு பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்வதால் அருவி பகுதியில் 'குளு குளு' சீசன் நிலவுகிறது.

நேற்று வெளியூரில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பில் குவிந்தனர். அவர்கள் அருவியிலும் அருகில் உள்ள சிறுவர் நீச்சல் குளத்திலும் உற்சாகத்துடன் குளித்து, சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அருவியின் மேல்பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து குதூகலத்துடன் வீடு திரும்பினர்.

மழை அளவு

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குளச்சலில் 42.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதே போல் மாவட்டத்தில் பிற இடங்களில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பூதப்பாண்டி-5.2, களியல்-16.2, கன்னிமார்-6.2, கொட்டாரம்-8.2, குழித்துறை-16.2, மயிலாடி-30.2, நாகர்கோவில்-26, புத்தன்அணை-24.2, சுருளகோடு-17.6, தக்கலை-21.4, இரணியல்-34, பாலமோர்-10.4, திற்பரப்பு-14.6, குருந்தன்கோடு-24, அடையாமடை-7.2, முள்ளங்கினாவிளை-15.2, பேச்சிபாறை அணை-10.2, பெருஞ்சாணி அணை-24.2, சிற்றார் அணை 1-12.2, சிற்றார் அணை 2-15, மாம்பழத்துறையாறு அணை-17, முக்கடல் அணை-2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

அணை நிலவரம்

மலையோர பகுதிகளிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வந்தாலும் கன மழை அல்லது பலத்த மழை இன்னமும் பெய்யவில்லை. இதனால் அணைகளுக்கு குறைவான அளவே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலையில் வினாடிக்கு 462 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 150 கனஅடி தண்ணீரும் மட்டுமே வந்தது.

அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 581 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும் பாசனத்துக்காக திறந்து விடப்பட்டு உள்ளது.

----


Next Story