கொலை-கொள்ளை, சாராய வழக்குகளில் 43 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நாகை கோட்டத்தில் நடப்பாண்டில் கொலை-கொள்ளை, சாராய வழக்குகளில் தொடர்புடைய 43 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், 5 மாதங்களில் மட்டும் 500 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகை கோட்டத்தில் நடப்பாண்டில் கொலை-கொள்ளை, சாராய வழக்குகளில் தொடர்புடைய 43 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், 5 மாதங்களில் மட்டும் 500 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
43 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகை கோட்டத்தில் சாராயம் கடத்துதல், கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்டவற்றை தடுப்பதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நாகை உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 108 ரவுடிகள் மீது நன்னடத்தை பிணையம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிணயத்தை மீறி குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 18 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாகை உட்கோட்டத்தில், நடப்பாண்டில் கொலை, கொள்ளை, சாராய வழக்குகளில் தொடர்புடைய 43 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
5 மாதத்தில் 500 வழக்குகள்
அதேபோல சாராயம், மது பாட்டில்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக இதுவரை 1,112 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல புகையிலை, பான் மசாலா பொருட்கள் விற்பது தொடர்பாக 283 வழக்குகள் பதியப்பட்டு, 20 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதை மீறி விற்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் மணல் கடத்தல் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ரகசியம் காக்கப்படும்
நாகை உட்கோட்டத்தில் குற்ற சம்பவங்கள் தொடர்பான 9498230235 என்ற செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.