சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 43 பேர் காயம்
அன்னவாசல் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 43 பேர் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே மண்ணவேளாம்பட்டி அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு 18 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டை அமைச்சர் மெய்யநாதன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 800 காளைகளை கால்நடை மருத்துவ குழுவினர் சோதனைக்கு பிறகு வாடிவாசலுக்குள் அனுப்பினர். அதேபோல் 190 மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த பின்னர் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மிரட்டிய காளைகள்
வாடிவாசலில் முதல் காளையாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன் பின்னர் உள்ளூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதைத்தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் என பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகளில் பல காளைகள் மின்னல் வேகத்தில் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. இருப்பினும் பல காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.
43 பேர் காயம்
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் வாதிரிப்பட்டி சின்னத்தம்பி (வயது 56), மேட்டுப்பட்டி கிருஷ்ணமூர்த்தி (55), வீரமங்கலம் சுமித் (25), மாங்குடி கலைமாறன் (20) உள்ளிட்ட 43 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த புத்தக்குடி குமரேசன் (45), புதுக்கோட்டை சரவணன் (21), காப்புக்குடி சிவராமகிருஷ்ணன் (25) உள்ளிட்ட 5 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பரிசு
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் குக்கர், ஹாட்பாக்ஸ், அயன்பாக்ஸ், சில்வர் அண்டா, பிளாஸ்டிக் சேர், வெளிநாட்டு பணம், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சிறந்த மாடுபிடி வீரராக 12 காளைகளை அடக்கிய அன்னவாசலை சேர்ந்த அரவிந்தன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எல்.இ.டி. டி.வி. வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு 12 பரிசுகள், ரொக்கமும் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் அமைச்சர் ரகுபதி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, தாசில்தார் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு
ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்திரி தலைமையில் அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டை காண அன்னவாசல் உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்திருந்த திரளானோர் கலந்து கொண்டு கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மண்ணவேளாம்பட்டி விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.