காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 43 பேர் காயம்


காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 43 பேர் காயம்
x

வல்லண்டராமம் மற்றும் களனிபாக்கம் கிராமங்களில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 43 பேர் காயமைடந்தனர். போலீசார் தடியடி நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

காளை விடும் விழா

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வல்லண்டராமம் கிராமத்தில் பொற்கொடி அம்மன் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சைனலதாமணி, துணைத்தலைவர் பிரித்தி வெங்கடேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அணைக்கட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீரா பென்காந்தி விழாவை தொடங்கி வைத்தார்.

235 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் சீறிப் பாய்ந்து ஓடியபோது முட்டியதில் 25 பேர் காயமடைந்தனர். ஒருவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

வேலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, தலைமையில் போலீசார் பாதுகாப்புபணியில் இருந்தனர். முதல் பரிசாக ரூ.55 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.40 ஆயிரம் உள்ளிட்ட 43 பரிசுகள் வழங்கப்பட்டன.

தடியடி நடத்த முயற்சி

400 காளைகளுக்கு நுழைவு கட்டணம் ரூ.1,700 பெற்றுக் கொண்டனர். ஆனால் 235 காளைகள் மட்டுமே ஓடவிடப்பட்டன. மீதமுள்ள காளைகள் போட்டியில் பங்கேற்க முடியவில்லை இதனால் காளை உரிமையாளர்களுக்கும், விழா குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் இன்ஸ்பெக்டர்கள் காளை உரிமையாளர்களை சமாதானம் செய்தும் அவர்கள் கேட்காததால் கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்த முற்பட்டனர். இதனால் கூட்டம் கலைந்தது. இன்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கழனிப்பாக்கம்

கழனிப்பாக்கம் கிராமத்தில் காளை விடும் விழா நடந்தது. தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார் ராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் ரீனா குமாரி பாபு, ஒன்றிய கவுன்சிலர் அமலா, ஆகியோர் முன்னிலை வகித்து விழாவை தொடங்கி வைத்தனர்.

பல்வேறு பகுதிகளிலிருந்து 212 காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. வாடிவாசலில் இருந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக சீறிப் பாய்ந்து ஓடின. காளை ஓடும் தெருவில் இளைஞர்கள் விசிலடித்து மாட்டின் மீது கையை போட்டு உற்சாகப்படுத்தினர். அப்போது சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள் முட்டியதில் 18 பேர் காயமடைந்தனர்.

முதல் பரிசாக ரூ.60 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.40ஆயிரம் என 53 பரிசுகள் அறிவிக்கப்பட்டன.


Next Story