தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கான 43 டி.எம்.சி. தண்ணீரை பெற்றுத்தர வேண்டும்
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்டி தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கான 43 டி.எம்.சி தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
மன்னார்குடி:
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்டி தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கான 43 டி.எம்.சி தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
பேட்டி
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்
பி.ஆர்.பாண்டியன் நேற்று மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காவிரி டெல்டாவில் 5 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டனர். சுமார் 1½ லட்சம் ஏக்கரில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆனால் 3.50 லட்சம் ஏக்கரில் விதைக்கப்பட்ட நெல் பயிர்கள் முளைக்க கூட தண்ணீர் இன்றி கருகி வருகிறது.
43 டி.எம்.சி. தண்ணீர்
சில இடங்களில் தண்ணீர் பாய்ந்து உரம் இடு வழியில்லாமல் கருக தொடங்கி இருக்கிறது. இந்த இழப்பிற்கு முழு பொறுப்பேற்க தமிழக முதல்-அமைச்சர் முன்வர வேண்டும்.
தற்போது கர்நாடக அணைகளில் 80 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் உள்ள நிலையில் தமிழகத்துக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கு வழங்க வேண்டிய 43 டி.எம்.சி. தண்ணீரை தர கர்நாடக அரசு மறுத்துவருகிறது.
காவிரி மேலாண்மை ஆணையம் ஜூன் மாதத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீர் 9.1 டி.எம்.சி. உத்தரவிட்டும். ஆனால் தண்ணீரை தராமல் கர்நாடகம் ஏமாற்றி விட்டது. தண்ணீரை பெற்று தர வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையம் மவுனம் காத்து வருகிறது.
நடவடிக்கை
இந்த நிலையில் கரும் நிலையில் உள்ள பயிரை காப்பாற்றுவதற்கு தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை சந்திப்பது திட்டமிட்ட நாடகமாகும். இச்சந்திப்பு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும் முரணாக உள்ளது.
தன்னாட்சி அதிகாரம் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நேரடி கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு ஜூன், ஜூலை மாதங்களுக்கான 43 டி.எம்.சி. தண்ணீரை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எந்த பயனும் அளிக்காது
ஆணையத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து கர்நாடகாவிடம் உடன் தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செயல்பட மத்திய அரசும், கர்நாடக அரசும் மறுக்குமேயானால் தமிழ்நாடு அரசும், ஆணையம் மூலம அவசர வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து தீர்வு காண முன்வர வேண்டுமே தவிர, மத்திய மந்திரியை சந்திப்பதால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு எந்த பயனும் அளிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.