போக்குவரத்து போலீசார் திடீர் சோதனை: நாகர்கோவிலில் ஒரே நாளில் 433 பேருக்கு அபராதம்


போக்குவரத்து போலீசார் திடீர் சோதனை:  நாகர்கோவிலில் ஒரே நாளில் 433 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் நகரில் போக்குவரத்து போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். ஒரே நாளில் 433 பேருக்கு அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆவணங்கள் இல்லாத 38 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் நகரில் போக்குவரத்து போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். ஒரே நாளில் 433 பேருக்கு அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆவணங்கள் இல்லாத 38 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாகன சோதனை

குமரி மாவட்டத்தில் அடிக்கடி நடைபெறும் வாகன விபத்துகள், அதனால் பாதிக்கப்படும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களை கருத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடத்தி போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் கடந்த சில நாட்களாக தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் நேற்று காலை மற்றும் மாலை வேளைகளில் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனை நடத்தினர். இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லசாமி, மோகன் மற்றும் போலீசார் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலைய பகுதி, கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதி, கோட்டார் கம்பளம் பகுதி ஆகிய 3 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றது, அதிவேகமாக சென்றது, இருசக்கர வாகனத்தில் 3 பேர் அமர்ந்து சென்றது, போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி இருந்தது, ஒரு வழிப்பாதையில் வாகனங்களை இயக்கியது, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றது போன்ற போக்குவரத்து விதி மீறலுக்காக 433 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

38 வாகனங்கள் பறிமுதல்

மேலும் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் இருந்த 38 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நாகர்கோவில் கோட்டார் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த வாகனங்களுக்கான ஆவணங்களை காண்பித்து பறிமுதல் செய்த வாகனங்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என போலீசார் தெரிவித்தனர். ஆவணங்கள் பரிசோதனையின்போது இன்சூரன்ஸ், ஓட்டுனர் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் இருந்தால் அதற்கான அபராத தொகையை செலுத்த வேண்டும் என்றும் போலீசார் கூறினர்.

மேலும் கடந்த 2 நாட்களில் நாகர்கோவில் நகரில் அனாதையாக நின்ற 3 கார்களை போலீசார் மீட்பு வாகனம் மூலம் பொருட்காட்சி திடலுக்கு கொண்டு போய் நிறுத்தினர்.


Next Story