பொள்ளாச்சி பகுதி பூங்காக்களில் 44 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்- அதிகாரிகள் தகவல்
பொள்ளாச்சி பகுதி பூங்காக்களில் 44 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதி பூங்காக்களில் 44 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூங்காவில் மரக்கன்றுகள்
கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள காலி இடங்கள், விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகிறது. வீட்டுமனைகளாக மாற்றும் போது குடிநீர் தொட்டி அமைக்க, பூங்கா அமைக்க மற்றும் அரசு பயன்பாட்டிற்கு இடம் ஒதுக்க வேண்டும். ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்ட பூங்கா இடங்கள் பெரும்பாலும் காலியாகவே கிடக்கின்றன. நிதி ஒதுக்கீடு செய்யாததால் பூங்கா அமைக்க முடியாத நிலை உள்ளது.
இதற்கிடையில் அந்த இடங்களை அருகில் உள்ள இடத்தின் உரிமையாளர்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக தமிழக அரசு ஊராட்சி பகுதிகளில் பூங்கா இடங்கள் ஆக்கிரமிப்பை தடுக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு பூங்கா இடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அரசுக்கு ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் அறிக்கை அனுப்பினார்கள். இதை தொடர்ந்து அந்த இடங்களில் கம்பி வேலி அமைப்பது, மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:-
நிதி ஒதுக்கீடு
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளும், தெற்கில் 26 ஊராட்சிகளும், ஆனைமயைில் 19 ஊராட்சிகளும், கிணத்துக்கடவில் 34 ஊராட்சிகளும், சுல்தான்பேட்டையில் 20 ஊராட்சிகளும் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பூங்கா இடங்கள் குறித்த இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. இதில் வடக்கு ஒன்றியத்தில் 118 இடங்களும், தெற்கில் 104 பூங்கா இடங்களும் உள்ளது தெரியவந்து வந்து உள்ளது.
இதை தொடர்ந்து பூங்கா இடங்களை தனியார் ஆக்கிரமிப்பை தடுக்க மரக்கன்றுகள் நடவும், கம்பி வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் காரமடை, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, எஸ்.எஸ்.குளம், சூலூர், அன்னூர், சுல்தான்பேட்டை ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்களில் 377 பூங்கா இடங்களில் ரூ.8 கோடியே 29 லட்சத்து 69 ஆயிரம் செலவில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 572 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
ஊராட்சி மூலம் பராமரிப்பு
இதில் வடக்கு ஒன்றியத்துக்கு ரூ.58 லட்சத்து 77 ஆயிரமும், தெற்கிற்கு ரூ.11 லட்சத்து 88 ஆயிரமும், ஆனைமலைக்கு ரூ.33 லட்சத்து 76 ஆயிரமும், கிணத்துக்கடவிற்கு ரூ.1 கோடியே 31 லட்சத்து 71 ஆயிரமும், சுல்தான்பேட்டைக்கு ரூ.47 லட்சத்து 96 ஆயிரமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேற்கண்ட ஒன்றியங்களில் மட்டும் 143 இடங்களில் 44,080 மரக்கன்றுகள் நடப்படுகிறது.
பூங்கா இடங்கள் அந்தந்த ஊராட்சி மூலம் சுத்தப்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாவல், புங்கன், வேம்பு உள்ளிட்ட பலன் தரும் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இந்த பணிகள் குறித்து அந்தந்த ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.