மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலயத்தின் 443-வது மகிமை பெருவிழா கொடியேற்றம்
மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலயத்தின் 443-வதுமகிமைப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உடன்குடி,
தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கடற்கரையில் அமைந்துள்ள திருச்சிலுவை நாதர் ஆலயம். மூன்று பக்கம் கடல் நடுவினிலே இயற்கையாக அமைந்துள்ளது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட உண்மை சிலுவையின் ஒரு சிறு துண்டு இந்த ஆலயத்தில் இருப்பது தனிச்சிறப்பு ஆகும். இந்த ஆண்டு ஆலயத்தின் 443-வது திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலியும், காலை 6.30 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலியும் தொடர்ந்து மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடந்தது. காலை 8 மணிக்கு மணவை மறைவட்ட முதன்மை குரு ஜாண் செல்வம் தலைமையில் ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. பங்கு தந்தையர்கள் மனோ, ஜாண் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செப்டம்பர் 14-ம் தேதி திருச்சிலுவை மகிமைப் பெரு விழாவையொட்டி காலை 4 மணிக்கு பங்கு ஆலயம் மற்றும் திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலியும், காலை 5 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் மலையாளத்தில் திருப்பலியும், காலை 6 மணிக்கு திருத்தலத்தை சுற்றி திவ்விய ஜந்து திருக்காய சபையினர் பவனியும், ஆயர் நசரேன் சூசை பெரும் விழா திருப்பலி, ஜந்து திருக்காய சபையின் பொறுப்பாளர் நியமனம். மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடக்கிறது.
மாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசீர், மெய்யான திருச்சிலுவை முத்தம் செய்தல் , மாலை 5.30 மணிக்கு கொடியிறக்கம், நன்றி திருப்பலி நடக்கிறது. செப்டம்பர் 15-ம் தேதி புனித வியாகுல அன்னை திருவிழா நடக்கிறது. இதையொட்டி காலை 5 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலியும் நடக்கிறது.
ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் லெரின் டிரோஸ், ஆரோக்கிய அமல்ராஜ், அருட் சகோதரர் ரஷ்யன், அருட்சகோதரிகள், புனித யாகப்பர் ஆலய நலக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.