445 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.27 கோடி கடனுதவி


445 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.27 கோடி கடனுதவி
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 445 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.27 கோடி மதிப்பில் கடனுதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.

ராணிப்பேட்டை

ரூ.27 கோடி கடன் உதவி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக் கடன்கள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கினார். அதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 445 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.27 கோடியே 17 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் 9 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.4 கோடியே 5 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கும் விழா மாந்தாங்கல் கிராமத்தில் நடைபெற்றது.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, மகளிர் குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது :-

மகளிர் சுயஉதவி குழு

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் இந்தியாவிலேயே முதல்முறையாக 1989-ம் ஆண்டு தர்மபுரியில் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் மகளிர் குழுக்களுக்கு அதிகப்படியான வங்கிக் கடனுதவிகள் வழங்கி ஏழை, எளிய மகளிரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துள்ளார். இதனால் மகளிர் மத்தியில் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வளர்ந்திருக்கிறது.

உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டுத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறையினை முதல்-அமைச்சர் ஒதுக்கியுள்ளார். ஆகவே இனிவரும் காலங்களில் விளையாட்டுத்துறையில் மகளிர் பங்கு அதிகரிக்கவும், அரசின் நலத்திட்டங்களை அனைத்து மகளிரும் பெற்று பயனடைய நடவடிக்கையை மேற்கொள்வார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 பவுனுக்கு கீழ் நகைக் கடன் பெற்ற 23,578 பயனாளிகளுக்கு ரூ.76 கோடியே 67 லட்சம் நடைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன், ஒன்றியக் குழு தலைவர்கள் பெ.வடிவேலு, கே.புவனேஷ்வரி சத்தியநாதன், கலைக்குமார், அனிதா குப்புசாமி, நகர மன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, தமிழ்ச்செல்வி அசோகன், லட்சுமி பாரி, பேரூராட்சித் தலைவர் அம்பிகா மகேஷ், நகர மன்ற துணைத் தலைவர்கள் ரமேஷ் கர்ணா, கமலராகவன், உதவி திட்ட அலுவலர் சுபாஷ்சந்திரன், முன்னோடி வங்கி மேலாளர் ஆலியம்மா ஆபிரஹாம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story