வெளிநாட்டு பணம் உள்பட ரூ.45½ லட்சம் பறிமுதல்


வெளிநாட்டு பணம் உள்பட ரூ.45½ லட்சம் பறிமுதல்
x

வெளிநாட்டு பணம் உள்பட ரூ.45½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

செம்பட்டு:

திருச்சி விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரியும் நபர்களிடம் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாததால் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று சிங்கப்பூர் நோக்கி புறப்பட இருந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரின் கைப்பையை சோதனை செய்தனர். அதில் ரூ.24.57 லட்சம் மதிப்பிலான 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிங்கப்பூருக்கு கடத்த இருந்த அந்த டாலர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து, சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து திருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த மலேசியாவை சேர்ந்த அக்ரோசியா முகமது இப்ராஹிம்(வயது47) என்ற பெண் பயணியின் உடைமையை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் மறைத்து இந்திய ரூபாயில் 500 மற்றும் 2 ஆயிரம் நோட்டுகளாக மொத்தம் ரூ.21 லட்சத்தை வெளிநாட்டிற்கு கடத்த இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் உள்பட ரூ.45 லட்சத்து 57 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story