454 கால்நடை உதவி டாக்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


454 கால்நடை உதவி டாக்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x

454 கால்நடை உதவி டாக்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், கால்நடை டாக்டர்களின் அவசர மற்றும் அவசியத் தேவையைக் கருத்தில் கொண்டு, கால்நடை பராமரிப்புத் துறையில் ஏற்கெனவே காலியாக உள்ள 258 இடங்கள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகங்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட 585 கால்நடை உதவி மருத்துவப் பணியிடங்கள் என 843 கால்நடை உதவி டாக்டர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நிரப்பப்பட்டன.

இவ்வாறு முறையாக வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் மூப்பு மற்றும் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கால்நடை உதவி டாக்டர்கள் காலமுறை ஊதியத்தில் கடந்த 11 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறார்கள். 843 பேர் கால்நடை உதவி டாக்டர்களாக பணியமர்த்தப்பட்டாலும், தற்போது 454 கால்நடை உதவி டாக்டர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். 11 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், அவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வினை எழுதுவது என்று சொல்வது இயற்கை நியதிக்கு மாறான செயல்.

கொரோனா தொற்று காலத்தில் அவர்கள் ஆற்றிய சேவையை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே உள்ள முன்னுதாரணத்தை பின்பற்றி, 454 கால்நடை உதவி டாக்டர்களின் பணியை உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story