பஞ்சப்படி வழங்க வலியுறுத்தி மறியல் போராட்டம்:ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் 455 பேர் கைது


பஞ்சப்படி வழங்க வலியுறுத்தி மறியல் போராட்டம்:ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் 455 பேர் கைது
x

பஞ்சப்படி வழங்க வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் 455 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

சேலம்,

மறியல் போராட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் நேற்று ராமகிருஷ்ணா சாலையில் உள்ள சேலம் கோட்ட போக்குவரத்துக்கழக அலுவலகம் முன்பு கூடினர். பின்னர் அவர்கள் பஞ்சப்படி உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 24 பெண்கள் உள்பட 455 பேரை போலீசார் கைது செய்தனர். மறியல் போராட்டத்தால் ராமகிருஷ்ணா சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அடுத்த கட்ட போராட்டம்

இது குறித்து அமைப்பின் மண்டல தலைவர் பழனிவேல் கூறியதாவது:-

போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 86 மாதங்களாக பஞ்சப்படி உள்ளிட்ட எந்த பணப்பயன்களும் வழங்கவில்லை. இது குறித்து அரசிடம் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை. இதையடுத்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதற்கு ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அரசு கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளது.

எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கோரிக்கை அரசுக்கு தெரியப்படுத்த இந்த மறியல் போராட்டத்தை நடத்தி உள்ளோம். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்டமாக குடும்பத்துடன் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story