பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் தமிழகத்தில் 46 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்


பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் தமிழகத்தில் 46 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்
x

பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் தமிழகத்தில் 46 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்று மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை,

இமாசல பிரதேசத்தின் சிம்லாவில் நடந்த பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடிய நிகழ்ச்சி சென்னை மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நேற்று ஒளிபரப்பப்பட்டது.

இதில் மத்திய மீன்வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் பங்கேற்று பேசியதாவது:-

46 லட்சம் விவசாயிகள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற 8 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. 2014-ம் ஆண்டுக்கு பிறகு, தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள வீடு களில் இலவச கழிவறை கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் 11 கோடியும், தமிழகத்தில் 1.27 கோடி இலவச கழிவறையும் கட்டி தரப்பட்டுள்ளது. அதேபோல், இலவச சமையல் கியாஸ் திட்டத்தில் நாடு முழுவதும் 8 கோடி புதிய கியாஸ் இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன.

இதில் தமிழகத்தில் 32 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதி உதவி வழங்கும் திட்டம் வாயிலாக, தமிழகத்தில் 46 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். இலவச குடிநீர் திட்டம் வாயிலாக 1.27 கோடி குழாய் இணைப்புகள் தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல பல்வேறு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஏராளமான பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர். மீன் வளத்துறையில், முதல் முறையாக ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

காசிமேடு துறைமுகம்

மீன்பிடி தொழில் மேம்பாடு, மீன் ஏற்றுமதி போன்றவற்றை மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், 5 மீன்பிடி துறைமுகங்களை சர்வதேச தரத்தில் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் காசிமேடு துறைமுகம் ஒன்று. மேலும், மகளிர் சுயஉதவி குழுக்கள் வாயிலாக கடல் பாசி தயாரிப்பு ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய உவர்நீர் மீன் வளரப்பு ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஜிதேந்திரன், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அரவிந்த்குமார், இந்திய எண்ணெய் நிறுவனத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல செயல் இயக்குனர் அசோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


Next Story