இலங்கைக்கு கடத்த முயன்ற 469 கிலோ பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த முயன்ற 469 கிலோ பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல்
பனைக்குளம்
இலங்கைக்கு கடத்த முயன்ற 469 கிலோ பூச்சிக்்கொல்லி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனை
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் சோதனை சாவடியில் கடலோர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சாவூரில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த வாகனத்தில் 16 சாக்கு மூடைகளில் பூச்சிக்கொல்லி மருந்து பவுடர்கள் இருப்பது தெரியவந்தது. வாகனத்தில் இருந்த 469 கிலோ பூச்சி மருந்து பவுடர்களையும், சரக்கு வாகனத்தையும் கைப்பற்றிய கடலோர போலீசார் அந்த வாகனத்தை ஓட்டி வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த உமர் பாரூக்(வயது 24) என்பவரையும் கைது செய்தனர்.
மேலும் விசாரணையில், தஞ்சாவூரில் இருந்து இந்த பூச்சிக்கொல்லி மருந்து மூடைகளை ஏற்றி வந்ததும், வேதாளை பகுதியில் உள்ள சலீம் என்பவரிடம் கொடுத்து இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இலங்கையில் பூச்சிக்கொல்லி மருந்து தட்டுப்பாடு உள்ளதால் தமிழகத்தில் இருந்து குறைந்த விலையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி படகு மூலம் ஏற்றி இலங்கைக்கு கொண்டு சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக முயன்றுள்ளனர். இதுதொடர்பாக ராமநாதபுரத்தை சேர்ந்த சாருக்கான் மற்றும் மண்டபம் மரைக்காயர் பட்டினம் பகுதியைச் சேர்ந்த அகமது கலீம் ஆகிய இருவரையும் கடலோர போலீசார் தேடி வருகின்றனர்.
பரபரப்பு
பறிமுதல் செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள், சரக்கு வாகனம் மற்றும் கைது செய்யப்பட்ட நபரை ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் கடலோர போலீசார் ஒப்படைத்தனர். இதுவரை ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, பீடி இலை, ஹெராயின், கடல் அட்டை, மஞ்சள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவைகள் கடத்திச் செல்லப்பட்ட நிலையில் தற்போது பூச்சிக்கொல்லி மருந்தும் கடத்திச் செல்ல முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.