கர்நாடக மாநிலத்தில் இருந்து ஜூன் 1-ந்தேதி முதல் மேட்டூர் அணைக்கு இதுவரை 470 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது
கர்நாடக மாநிலத்தில் இருந்து கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் இதுவரை 470 டி.எம்.சி. தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணை
காவிரி டெல்டா விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கும் மேட்டூர் அணை 1934-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி.ஆகும். (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி ஆகும்). அணையின் உச்சமட்ட நீர்சேமிப்பு உயரம் 124 அடியாகும். ஆனால் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 120 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடிய பெய்யும் தென்மேற்கு பருவ மழை, அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய பெய்யும் வடகிழக்கு பருவ மழை ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைத்து தமிழகத்தின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த அணை கட்டப்பட்டது.
காவிரி நதிநீர் ஆணையம்
எனினும் காவிரி உற்பத்தியாவது கர்நாடக மாநிலம் குடகு மலை ஆகும். இதன் காரணமாக கர்நாடகாவுக்கும், தமிழகத்துக்கும் தண்ணீரை பங்கீடு செய்வதில் தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பிரச்சினையை தீர்ப்பதற்காக மத்திய அரசின் ஏற்பாட்டில் காவிரி நதிநீர் ஆணையம் கடந்த 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் இடைக்கால தீர்ப்பாக 192 டி.எம்.சி. தண்ணீரை ஆண்டுதோறும் தமிழகத்திற்கு கர்நாடகம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனாலும் தண்ணீரை பங்கீடு செய்வதில் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் தமிழக அரசு சுப்ரீம் கோர்்ட்டை நாடியது. இதையடுத்து 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
470 டி.எம்.சி.
இந்த தீர்ப்பின் படி இந்த ஆண்டு ஜூன் 1-ந் தேதி முதல் இதுவரை 470 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகத்தில் இருந்து மேட்டூர் அணைக்கு வந்துள்ளது. காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்ட 1992-ம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு வரை கணக்கிட்டு பார்க்கும்போது இந்த ஆண்டுதான் தமிழகத்துக்கு கர்நாடகத்திலிருந்து அதிகபட்சமாக 470 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது.
இந்த ஆண்டில் வடகிழக்கு பருவ மழையும் சிறப்பாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மேலும் 50 டி.எம்.சி. தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும் அணை கட்டப்பட்ட வரலாற்றில் இந்த ஆண்டுதான் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 70 நாட்களாக 120 அடியாக நீடித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.