சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வை 4,700 பேர் எழுதுகின்றனர்


சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வை 4,700 பேர் எழுதுகின்றனர்
x

தேனி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 5 மையங்களில் 4,700 பேர் எழுதுகின்றனர்.

தேனி

தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்பும் வகையில், இந்த பணிக்கான எழுத்துத்தேர்வு நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 4 ஆயிரத்து 700 பேருக்கு இணையதளம் மூலமாக ஹால்டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்காக மாவட்டத்தில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி தேனி மேரிமாதா மெட்ரிக் பள்ளி, முத்துத்தேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தலா ஒரு மையமும், தேனி கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் 3 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமை தாங்கி இந்த தேர்வு பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கி பேசினார். அவர் பேசும்போது, 'தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்கு முன்பு வரவேண்டும். இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கும். 10 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு எழுத வரும்போது ஹால்டிக்கெட், அடையாள அட்டை, நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனை பேனா (பால்பாயின்ட் பேனா) ஆகியவற்றை தவிர வேறு எந்த பொருட்களும் கொண்டு வரக்கூடாது' என்றார்.

இந்த கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story