ராமநாதபுரம்-நயினார்கோவில் இடையே ரூ.48 கோடியில் மேம்பாலம், 4 வழிச்சாலை பணிகள்


ராமநாதபுரம்-நயினார்கோவில் இடையே ரூ.48 கோடியில் மேம்பாலம், 4 வழிச்சாலை பணிகள்
x
தினத்தந்தி 1 Sept 2023 12:30 AM IST (Updated: 1 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம்-நயினார்கோவில் இடையே ரூ.48 கோடி செலவில் 2 பாலங்கள், 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரம்


ராமநாதபுரம்-நயினார்கோவில் இடையே ரூ.48 கோடி செலவில் 2 பாலங்கள், 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகின்றன.

சாலையை மேம்படுத்த

ராமநாதபுரம் நயினார்கோவில் இடையே 30.2 கிலோ மீட்டர் சாலை மாநில நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த சாலை மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை, மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை, மதுரை-திருச்சி இடையேயான மேலூர் சாலை ஆகியவற்றை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இருவழிச்சாலையாக உள்ள இந்த மாநில நெடுஞ்சாலை பகுதியில் பெரியகண்மாய் பகுதியில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் அழகன்குளம் முகத்துவாரம் பகுதிக்கு சென்று கடலில் கலந்து வருகிறது.

இதுதவிர, ஆயிரம் அடி தத்து எனப்படும் வெள்ள நீர் போக்கியும், தரைமட்ட பாலமும் இந்த சாலையில்தான் உள்ளது. பெருவெள்ள காலங்களில் சாலை வழியாக திறந்துவிடப்படும் உபரிநீர் தரைமட்ட பாலம் வழியாக வழிந்தோடி கிராமங்களுக்குள் புகுந்து மூழ்கடித்து வந்தது. இதன்காரணமாக சாலையில் மழைகாலங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் செல்ல வேண்டி இருந்தது. தொடர்ந்து இருந்து வந்த இந்த பிரச்சினையை கருத்தில் கொண்டும் சுற்றுவட்டார கிராமங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் மேற்கண்ட சாலையை மேம்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

4 வழிச்சாலை

அதன்படி ராமநாதபுரம்-நயினார் கோவில் சாலையில் பாலம் அமைய உள்ள பகுதியில் அமைந்துள்ள 5 கிலோமீட்டர் சாலை மட்டும் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து 2-வது கிலோ மீட்டர் முதல் 7-வது கிலோ மீட்டர் வரையிலான சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. தற்போது 7 மீட்டராக உள்ள இந்த சாலை இருபுறமும் தலா 7½ மீட்டர் என விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இதுதவிர பாதையில் 108 மீட்டருக்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. 30 மீட்டருக்கு சிறிய பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த 2 பாலங்களும் வெள்ளநீர் கடத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநிலஅரசின் நிதி உதவியுடன் ரூ.48 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்ததும் மேலும் 8 கிலோ மீட்டர் சாலையை 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story