242 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
காட்டேரி அணை கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 242 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
குன்னூர்
காட்டேரி அணை கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 242 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மனுநீதி நாள் முகாம்
குன்னூர் அருகே அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டேரி அணை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். பின்னர் 10 பயனாளிகளுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ், முதல்-அமைச்சரின் விபத்து நிவாரண திட்டத்தின் கீழ் 3 பேருக்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலை, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை என ரூ.14½ லட்சம் பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
மேலும் 2 பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டு, மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம், தோட்டக்கலைத்துறை சார்பில் 101 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய வேளாண் உபகரணங்கள், வேளாண் மற்றும் பொறியியல் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் வேளாண் எந்திரங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 1 பயனாளிகளுக்கு ரூ.8 ஆயிரம் உதவித்தொகை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.7 ஆயிரத்து 900 மதிப்பில் சக்கர நாற்காலி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.11 ஆயிரம் மதிப்பில் தையல் எந்திரங்களை வழங்கினார்.
இது தவிர மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.20½ லட்சம் மதிப்பில் கடனுதவி வழங்கினார். முகாமில் 242 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.49 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கண்காட்சி அரங்குகள்
முன்னதாக காட்டேரி அணை பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்து, அதிகரட்டி பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கை கலெக்டர் அம்ரித் பார்வையிட்டார். பின்னர் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக பயன்படுத்த மஞ்சப்பைகள் மற்றும் உரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இதில் குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷ்ணகுமார், தோட்டகலைத்துறை இணை இயக்குனர் கருப்புசாமி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மரு.பகவத்சிங், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா, வேளாண் பொறியியல் துறை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.