மாற்று இடம் வழங்கக்கோரி 4-வது நாளாக போராட்டம்
சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் மாற்று இடம் வழங்கக்கோரி 4-வது நாளாக போராட்டம் நடந்தது.
திருவண்ணாமலை தாலுகா சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
வீடுகளை இடிக்க முயற்சி செய்வதை நிறுத்த வேண்டும். மேலும் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து கடந்த 29-ந் தேதி முதல் தொடர் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் இந்த போராட்டம் தொடர்ந்தது. அப்போது அவர்கள் போராட்டம் நடைபெறும் இடத்தின் அருகில் சாலையோரம் சமையல் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் தாசில்தார் சரளா தலைமையிலான வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பாதிக்கப்பட்டவர்கள் பல வருடங்களாக குடியிருந்து வரும் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்றால் உடனடியாக மாற்று இடம் தேர்வு செய்து பட்டாவுடன் வழங்க வேண்டும் என்றனர்.
அதற்கு வருவாய்த்துறையினர்இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாவட்ட செயலாளர் ஜெகன் கூறுகையில், பட்டாவுடன் மாற்று இடம் வழங்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றார்.