மீனவர்கள் குடும்பத்தினருடன் 4-வது நாளாககாத்திருப்பு போராட்டம்


மீனவர்கள் குடும்பத்தினருடன் 4-வது நாளாககாத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அமலிநகரில் மீனவர்கள் குடும்பத்தினருடன் 4-வது நாளாக வியாழக்கிழமை தூண்டில் வளைவு பாலம் அமைக்க கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் வளைவு பாலத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி நேற்று 4-வது நாளாக வேலைநிறுதத்தில் ஈடுபட்ட மீனவர்கள், குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், மீன்கள் விலை உயர்ந்துள்ளது.

காலவரையற்ற வேலைநிறுத்தம்

திருச்செந்தூர் அமலிநகரில் சட்டமன்றத்தில் அறிவித்தவாறு தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி மீனவர்கள் கடந்த 20-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல் நாள் நாட்டு படகுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாள் குடும்பத்தினருடன் மனித சங்கிலி போராட்டமும், படகுகளில் கருப்புக்கொடி கட்டி கடலுக்குள் நின்று போராட்டமும் நடத்தினர்.

4-வது நாளாக போராட்டம்

3-வது நாளான நேற்று முன்தினம் அமலிநகரில் உள்ள தந்தை யுசேபியஸ் கலையரங்கம் முன்பு மீனவர்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு புன்னக்காயல் உள்ளிட்ட 8 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ஆதரவு தெரிவித்தனர். மேலும் அமலிநகரில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் அந்த மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து 4-வது நாளான நேற்று மீனவர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்ததுடன், தங்கள் குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், மீன்கள் விலை கணிசமாக உயர்த்தி விற்கப்படுகிறது. தூண்டில் வளைவுபாலம் அமைக்கும் பணி தொடங்கும் வரை போராட்டத்தை தொடருவோம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

பலத்த பாதுகாப்பு

மீனவர்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, அமலநகரில் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story