உளுந்தூர்பேட்டை அருகே வீடுபுகுந்து விவசாயியை வெட்டிய 5 பேர் கைது பட்டாக்கத்திகள், அரிவாள் பறிமுதல்


உளுந்தூர்பேட்டை அருகே  வீடுபுகுந்து விவசாயியை வெட்டிய 5 பேர் கைது  பட்டாக்கத்திகள், அரிவாள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே வீடுபுகுந்து விவசாயியை வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்து, பட்டாக்கத்திகள், அரிவாள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி


உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்பையன் குளம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் சிவராஜ் (வயது 31). விவசாயி. இவர் கடந்த 30-ந்தேதி தனது முந்திரி தோப்பில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்த நாடு கிராமத்தில், நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து இளைஞர்கள் சிலர் வந்திருந்தனர்.

இதில், சென்னையை சேர்ந்த 2 பேர் அவர்களது பெண் தோழிகளுடன், சிவராஜியின் முந்திரி தோப்புக்கு சென்று இருக்கிறார்கள். இதை பார்த்த, சிவராஜ் அவர்களை தடுத்து நிறுத்தி, திட்டி அனுப்பினார். அப்போது, அந்த இளைஞர்கள் சிவராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணி அளவில் சேந்தநாடு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், அவனது சென்னை நண்பர்கள் சிலருடன் ஆட்டோவில் தொப்பையன் குளம் கிராமத்தில் உள்ள சிவராஜ் வீட்டுக்குள் புகுந்து அவரை கத்தியால் வெட்டினர்.

வீடியோ வெளியாகி பரபரப்பு

அங்கிருந்து தப்பி செல்லும் வழியில் சாலையோரம் நடந்து வந்த களத்தூரை சேர்ந்த விக்னேஷ் (27) என்பவரையும் வெட்டினார்கள்.இவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் ஒரு பெட்ரோல் பங்கில் ஆட்டோவுக்கு பெட்ரோல் நிரப்பி கொண்டு பணம் கொடுக்காமல் பட்டாகத்தியை காட்டி மிரட்டியதுடன், தொப்பையன்குளத்தில் டாஸ்மாக் முன்பு இருந்த இரண்டு முதியவர்களையும் அவர்கள் தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இது தொடர்பான பெட்ரோல் பங்கில் இருந்த கண்காணிப்பு கேமராகாட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அவர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று, சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஹரிஹரசுதன் (24), பாடி பகுதி முரளி கிருஷ்ணா(21), ஜெகதீஸ்வரன் (20), தைரியனாதன் (21) மற்றும் சேந்தநாடு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கைதானவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் மற்றும் 2 பட்டா கத்திகள், 1 அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிஹரசுதன் மீது ஏற்கனவே சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்ட திருநாவலூர் போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பாராட்டினார்.


Next Story