ஆசிரியை பயிற்சி மாணவியிடம் நகை பறித்த 5 பேர் கைது
திருப்பரங்குன்றம் அருகே ஆசிரியை பயிற்சி மாணவியிடம் நகை பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே ஆசிரியை பயிற்சி மாணவியிடம் நகை பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்
பி.எட்.மாணவி
உசிலம்பட்டியை அடுத்த வாலாந்தூர் அருகே உள்ள கே.நாட்டப்பட்டியை சேர்ந்தவர் நாகநந்தினி (வயது 29). பி.எட் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 28-ந் தேதி அன்று செக்கானூரணியில் இருந்து திருமங்கலத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மாவிலிப்பட்டி ரோடு சந்திப்பு பகுதியில் வந்த போது நாகநந்தினிக்கு போன் வந்தது. அதனால் அவர் ரோட்டின் ஓரமாக தனது வாகனத்தை நிறுத்திவிட்டு போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
நகை பறிப்பு
இந்த நிலையில் அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம ஆசாமிகள் கண் இமைக்கும் நேரத்தில் நாக நந்தினி கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசில் நாகநந்தினி புகார்செய்தார். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி லதா, சப்-இன்ஸ்பெக்டர் சாமியப்பன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.
5 பேர் கைது
இந்த நிலையில் சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த செக்கானூரணினய சேர்ந்த சிவபிரகாசம் (27) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நாகநந்தினியிடம் நகை பறித்ததாக ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரை கைது செய்தனர். மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து திருமங்கலத்தை சேர்ந்த திவாகர் (24), ஆனந்த் (19), ஸ்ரீராம் கவுசிக் (19), கீழ உரப்பனூரைசேர்ந்த சக்கரவர்த்தி (20) ஆகியோரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து நகையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.