முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் 5 பேர் கைது
கண்ணமங்கலம் அருகே முன்னாள் ராணுவவீரர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலியுடன் தகராறு செய்ததால் கொன்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்ணமங்கலம் அருகே முன்னாள் ராணுவவீரர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலியுடன் தகராறு செய்ததால் கொன்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ராணுவவீரர் கொலை
வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த வல்லம் அருகே உள்ள சந்தனகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 47), முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு திருமணமாகி ஜெயகுமாரி (45) என்ற மனைவியும், பரத் (24) என்ற மகனும் உள்ளனர். பூங்காவனம் பணம் வட்டிக்கு கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு பல்வேறு இடங்களில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பல பேரிடம் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பூங்காவனத்தை கண்ணமங்கலம் போலீஸ் நிலையம் அருகில், 5 பேர் கொண்ட கும்பல் மூங்கில் கட்டையால் ஓட ஓட விரட்டி அடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
5 பேர் கைது
விசாரணையில் கொலை செய்யப்பட்ட பூங்காவனத்திற்கும், கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (56) என்பவரது மனைவி ராஜலட்சுமிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சண்முகத்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது சண்முகம் மற்றும் அவரது உறவினர்கள் அண்ணாதுரை (56), ராஜசேகர் (31), ஜெகதீஷ் (30), ஜெயவேல் (57) ஆகியோர் சேர்ந்து பூங்காவனத்தை அடித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதனை அடுத்து அவர்கள் 5 பேரை கைது போலீசார் செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-
கள்ளத்தொடர்பு
கொலைசெய்யப்பட்ட பூங்காவனத்திற்கும், ராஜலட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பூங்காவனம், ராஜலட்சுமி மூலமாக பணத்தை வட்டிக்கு கொடுத்து, வசூல் செய்து வந்துள்ளார். பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது பூங்காவனத்தை, ராஜலட்சுமியின் கணவர் மற்றும் அவரது அண்ணன் ராஜசேகர் ஆகியோர் கண்டித்துள்ளனர். இருப்பினும் பூங்காவனம் தொடர்ந்து தகராறு சேய்யவே, திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.