ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது
சீர்காழி அருகே ரவுடி கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்பாக 2 பேர் விழுப்புரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே ரவுடி கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்பாக 2 பேர் விழுப்புரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
ரவுடி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் வடக்கு தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் ரெட் என்ற தினேஷ் (வயது 27). சாராய வியாபாரி. இவர் மீது சீர்காழி, புதுப்பட்டினம், செம்பனார்கோவில் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இவரது பெயர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி இரவு சீர்காழி அருகே கோவில்பத்து பள்ளிக்கூடம் அருகில் உள்ள ஒரு வயல்வெளியில் தினேஷ் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார்.
வெட்டிக்கொலை
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் மது அருந்தி கொண்டிருந்த தினேசை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.இதில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சீர்காழி கோவில்பத்து கீழ அகணி கிராமத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் அரவிந்தன் (27) மற்றும் இவரது நண்பர்களான மணல்மேடு மேலமருதாந்தக நல்லூர் மேல வீதியை சேர்ந்த பாலசுந்தரம் மகன் சரண்ராஜ் (39), மயிலாடுதுறை கழுக்கானிமுட்டம் பெரியார் தெருவை சேர்ந்த அம்பேத்கர் மகன் சிலம்பரசன் (33), மயிலாடுதுறை கூரைநாடு கணபதி நகரை சேர்ந்த வேல்முருகன் மகன் மணிகண்டன் (25), மயிலாடுதுறை சின்ன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்து மகன் முகேஷ் (20) ஆகிய 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
முன்விரோதம்
விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:- அரவிந்தனும், தினேசும் சாராய வியாபாரம் செய்து வந்துள்ளனர். இதனால் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பட்டினம் பாலத்தில் போலீசார் ஒருவரை தினேஷ் தாக்கி உள்ளார். இதுதொடர்பாக புதுப்பட்டினம் போலீசார் தினேசை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த தினேஷ், தான் தலைமறைவாக இருந்த போது என்னை போலீசாரிடம் காட்டிக் கொடுத்த அரவிந்தனை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த சில நாட்களாக காரில் அரவிந்தனை தேடி அலைந்துள்ளார்.
5 பேர் கைது
இதனை அறிந்த அரவிந்தன் தன்னை எதுவும் செய்வதற்குள் முந்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தினேசை அரவிந்தன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக்கொன்றது தெரிய வந்தது.
இதையடுத்து சீர்காழி போலீசார் அரவிந்தன், சரண்ராஜ், சிலம்பரசன், மணிகண்டன், முகேஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை சீர்காழி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் வழக்கு தொடர்பாக தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.
விழுப்புரம் கோர்ட்டில் 2 பேர் சரண்
இந்த ெகாலை வழக்கு தொடர்பாக போலீசார் தங்களை தேடுவதை அறிந்த கீர்த்திகரன் (21), பாரதி (27) ஆகிய இருவரும் நேற்று காலை விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து நீதிபதி ராதிகா உத்தரவின்பேரில் அவர்கள் இருவரும் விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.