பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த 5 ஆட்டோக்கள் பறிமுதல்


பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த 5 ஆட்டோக்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தகுதிச்சான்று பெறாமல் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

தகுதிச்சான்று பெறாமல் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தகுதிச்சான்று

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில், புத்தூர், திருமுல்லைவாசல், உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாணவர்களை ஏற்றி வரும் பல்வேறு வாகனங்கள் முறையாக தகுதிச்சான்று மற்றும் பராமரிப்பு இல்லாமல் இயங்குவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் விசுவநாதன் மற்றும் பணியாளர்கள் தென்பாதி பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி மாணவர்களை ஏற்றிவந்த ஆட்டோக்களை வழிமறித்து சோதனை செய்ததில் 5 ஆட்டோக்கள் தகுதி சான்றிதழ் பெறாமல் மாணவர்களை ஏற்றி வந்தது தெரிய வந்தது.

5 ஆட்டோக்கள் பறிமுதல்

இதனை தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் தகுதிச்சான்று பெறாத 5 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்து, மாணவர்களை வேறு வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அவர் கூறுகையில் அரசு சட்டத்திட்டங்களை கடைபிடிக்காத வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் முறையான ஆவணம் மற்றும் பாதுகாப்பு இன்றி கூடுதலாக பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகன ஓட்டுனர்கள் அல்லது உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆய்வு பணி சீர்காழி தாலுகா முழுவதும் தொடரும் என்றார். தகுதிச்சான்று பெறாமல் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வாகனங்களை பறிமுதல் செய்ததற்கு பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.


Next Story