புதிய தொழில் முனைவோர் திட்டத்தில் ரூ.5 கோடி வங்கி கடன்


புதிய தொழில் முனைவோர் திட்டத்தில் ரூ.5 கோடி வங்கி கடன்
x
தினத்தந்தி 9 Feb 2023 12:30 AM IST (Updated: 9 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் திட்டத்தில் ரூ.5 கோடி வங்கி கடன் வழங்கப்படும் என்று கலெக்டர் விசாகன் கூறியுள்ளார்.

திண்டுக்கல்

தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த பொருளாதார ரீதியாக சாத்தியப்படக்கூடிய தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கி கடன் வழங்கப்படுகிறது. மேலும் கடன்உதவி பெற்று தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

இதுதவிர ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் மானியம் கிடைக்கும். அதேபோல் கடனை தவறாமல் திருப்பி செலுத்தும் தொழில் முனைவோருக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு பிளஸ்-2, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ. தொழில்கல்வி ஆகிய கல்வி தகுதி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்.

மேலும் பொது பிரிவினர் 21 வயது முதல் 35 வயதுக்குள்ளும், சிறப்பு பிரிவினர் 21 வயது முதல் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதேபோல் தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருப்பது அவசியம். எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியும், விருப்பமும் உள்ள தொழில் முனைவோர்கள் https://www.msmetamilnadu.tn.gov.in எனும் இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.


Next Story