ரூ.5½ கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்


ரூ.5½ கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோரகுந்தா வராகபள்ளம் பகுதியில் இருந்து கிண்ணக்கொரை கிராமத்திற்கு ரூ.5½ கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என ஆ.ராசா எம்.பி. தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி,

கோரகுந்தா வராகபள்ளம் பகுதியில் இருந்து கிண்ணக்கொரை கிராமத்திற்கு ரூ.5½ கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என ஆ.ராசா எம்.பி. தெரிவித்தார்.

கண்காணிப்புக்குழு கூட்டம்

நீலகிரி மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் நடந்தது. கூட்டத்திற்கு கண்காணிப்பு குழு தலைவர் ஆ.ராசா எம்.பி. தலைமை தாங்கினார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுளின் பல்வேறு துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும், பணிகளின் நிலை மற்றும் அதன் தரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் மாவட்டத்தில் 2021-2022 மற்றும் 2022-2023 நிதியாண்டில் எடுக்கப்பட்ட பணிகள், முடிக்கப்பட்ட பணிகள், இந்த பணிகளில் ஏதேனும் தடை உள்ளதா எனவும் அதிகாரிகளிடத்தில் கேட்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

கூட்டு குடிநீர் திட்டம்

நீலகிரி மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி பணிகளையும் விரைந்து முடிக்கவும், அதேசமயம் தரமாக முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தொடர்ந்து ஆ.ராசா எம்.பி. கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் 2 கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மஞ்சூர் அருகேயுள்ள கிண்ணக்கொரை பகுதிக்கு கோரகுந்தா வராகபள்ளம் பகுதியில் இருந்து ரூ.5.54 கோடி மதிப்பில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம் மூலம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அதேபோல், கடநாடு கூட்டு குடிநீர் திட்டப் பணிகளுக்காக ரூ.2.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கடநாடு கிராமத்தை சுற்றியுள்ள 114 கிராம மக்கள் பயன்பெறுவார்கள். இந்த குடிநீர் திட்ட பணிகள் அடுத்த மாதம் இறுதிக்குள் நிறைவு பெறும்.

நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

கூடலூர் பகுதியில் அடிக்கடி மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கின்றனர். இதனை தடுக்க வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வருகிற கோடை சீசனுக்கு முன்னதாக ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட சாலைகளை சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சர் நேருவிடம் பேசியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story