மாயனூர் தடுப்பணைக்கு வடகரை வாய்க்கால் தலைமடையை மாற்ற ரூ.5½ கோடியில் திட்டம்
40 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வாக மாயனூர் தடுப்பணைக்கு வடகரை வாய்க்கால் தலைமடையை மாற்ற ரூ.5½ கோடியில் புதிய திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.
40 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வாக மாயனூர் தடுப்பணைக்கு வடகரை வாய்க்கால் தலைமடையை மாற்ற ரூ.5½ கோடியில் புதிய திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி முன்னிலை வகித்தார்.
இதில் அனைத்து துறை அதிகாரிகளும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் பூ.விஸ்வநாதன் உள்பட பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியவுடன், அனைத்து விவசாயிகள் சார்பில் அய்யாக்கண்ணு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கலெக்டருக்கு பாராட்டு
வடகரை வாய்க்கால் தலைமடை ஸ்ரீராமசமுத்திரம் பகுதியில் உள்ளதால் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் காலத்தில் மட்டுமே ஆண்டுக்கு 4 அல்லது 5 மாதங்களுக்கு தண்ணீர் பெறும் நிலை உள்ளது. முன்பு மாயனூர் தடுப்பணையில் தலைமடை பகுதியிருந்ததால் 3 போகம் சாகுபடி நடைபெற்றது. எனவே, வடகரை வாய்க்கால் தலைமடை பகுதியை மாயனூர் தடுப்பணை பகுதிக்கு மாற்ற வேண்டும் என 40 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போதுதான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தலைமடையை மாற்ற ரூ.5½ கோடியில் திட்ட வரைவு தயாரித்து அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் தலைமடை மாறுவதால் இனி 8 முதல் 9 மாதங்களுக்கு வாய்க்காலில் தண்ணீர் வரும். 28 கி.மீ. தொலைவு உள்ள இந்த வாய்க்கால் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். குறிப்பாக வாழை உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதற்காக அனைத்து விவசாயிகள் சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, விவசாயிகள் அனைவரும் கைகளை தட்டி ஒலி எழுப்பினர். இதைத்தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது கூறியதாவது:-
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
உய்யகொண்டான் வாய்க்காலில் நிரம்பியுள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும். அதில் கழிவு நீர் கலப்பதை தடை செய்ய வேண்டும். திருச்சி மாவட்டத்தில் அரைவட்ட சுற்றுச்சாலை என்ற பெயரால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. பஞ்சப்பூர் தொடங்கி தஞ்சாவூர் சாலை பரந்தான்குளம் வரை மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளை உடன் அகற்ற வேண்டும். பயிர்களுக்கு தகுந்தப்படி கடன் தவணை திரும்ப செலுத்தும் அவகாசத்தை மாற்றம் செய்ய வேண்டும்.
தமிழகத்திலேயே காவிரி நதிக்கரையில் விளைந்து ருசிமிக்கவையாக உள்ள பூவன், கற்பூரவல்லி வாழைகளுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் சத்துணவு திட்டத்தில் வாழைப்பழம் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கும் வாழைப்பழம் வழங்க வேண்டும். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்காக மே 24-ந்தேதியே மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும். உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். காவிரி, டெல்டாவில் தூர் வாரும் பணிகளை மேட்டூர் அணை திறக்கும் முன் முடிக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.
தூர்வாரும் பணிகள்
அதற்கு மாவட்ட கலெக்டர் பதிலளித்து பேசும்போது, காவிரி டெல்டாவில் 374 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளது. பணிகளை மே மாத இறுதிக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்கள் போதிய அளவில் இருப்பு உள்ளன. இந்த விவரங்களை விவசாயிகள் தினந்தோறும் அறியும் வகையில் இணையத்தில் பதிவேற்றப்படும் என்றார்.