திருநாறையூர் மனுநீதி நாள் முகாமில்ரூ. 5 கோடியில் நலத்திட்ட உதவிகள்அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார்
திருநாறையூர் மனுநீதி நாள் முகாமில் ரூ. 5 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார்.
காட்டுமன்னார்கோவில்,
குமராட்சி அருகே திருநாரையூர் கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். தனித்துணை கலெக்டர் உதயகுமார், சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன், சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி சோழன் வரவேற்றார். அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து 1027 பயனாளிகளுக்கு 5 கோடியே 12 லட்சத்து 24 ஆயிரத்து 743 ரூபாய் மதிப்பில் இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர்பேசுகையில், கொள்ளிடத்தில் வடகரையில் தற்போது 5 கிலோமீட்டர் தூரம் 20 கோடி மதிப்பில் கரை பலப்படுத்தும் பணி நடைபெறுகிறது.விரைவில் முட்டத்திலிருந்து, வல்லம்படுகை வரை நபார்டு திட்டத்தின் கீழ்சாலை பலப்படுத்தும் பணி நடைபெறும். வருகிற செப்டம்பர் 15-ந்தேதி ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தை தொழில் நகரமாக மாற்றுவதற்காகவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் சென்றுள்ளார் என்றார் அவர். இதில் கல்வி குழு உறுப்பினர்கள் சோழன், கோவிந்தசாமி நடராஜன், ராஜேந்திர குமார், சங்கர், மணவாளன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேவிகா மணி சேகர், ஒன்றிய குழு உறுப்பினர் சிவலோகநாதன், சமூக நலப்பாதுகாப்பு தாசில்தார் ஹரிதாஸ், தலைமை இடத்து துணை தாசில்தார் பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்ராஹிம், மோகன்ராஜ், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் மாரி செல்வம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் கவிதா அன்பு காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தாசில்தார் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
இதற்கிடையே, நிகழ்ச்சியை காதுகேளதவர்களும் அறிந்து கொள்ளும்வகையில், அமைச்சர், கலெக்டர் உள்ளிட்ட அனைவரது பேச்சையும், சிறப்பு பயிற்சி பெற்ற பெண் ஒருவர் விளக்கம் அளித்தார்.