434 பயனாளிகளுக்கு ரூ.5¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்
434 பயனாளிகளுக்கு ரூ.5¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அருணகிரிமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 434 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.5.80 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் வழங்கினார். முகாமில் மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கி பேசுகையில், அரசு அலுவலர்களைத் தேடி பொதுமக்கள் சென்று தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வழங்கும் நிகழ்வை மாற்றி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகமே நேரில் வந்து அரசின் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை சம்பந்தப்பட்ட துறைகளில் உயர் அலுவலர்களே விளக்கிக்கூறி, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றிற்கு உரிய தீர்வு காணும் வகையில் நடத்தப்படுவதுதான் மக்கள் தொடர்பு திட்ட முகாம் என்றார்.
இந்த முகாமில், பல்வேறு துறைகளின் சார்பில் மாதாந்திர உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை, தையல் எந்திரம், கடனுதவிகள், பயிர் கடன், மின்மோட்டார்கள், திருமண நிதியுதவி திட்டம், ஊட்டச்சத்து பெட்டகம் என 434 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 80 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். முகாமில் ஆலத்தூர் ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.