5 மாவட்ட அளவிலான நீடித்த வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம்


5 மாவட்ட அளவிலான நீடித்த வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்பட 5 மாவட்ட அளவிலான நீடித்த வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் அரசு சிறப்புசெயலாளர் சகாய்மீனா தலைமையில் நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்பட 5 மாவட்ட அளவிலான நீடித்த வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் அரசு சிறப்புசெயலாளர் சகாய்மீனா தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து 5 மாவட்டங்கள் (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், அரியலூர்) அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அரசு சிறப்புச் செயலர் சகாய்மீனா தலைமை தாங்கினார். மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, நாகை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அரசு சிறப்பு செயலாளர் சகாய்மீனா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வளர்ச்சி குறியீடு

இந்தியாவில் நிதி ஆயோக் வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாட்டில் மாநில திட்டக்குழுவின் ஆலோசனைப்படியும் பொருளியல் மற்றும் புள்ளியல் துறை அலுவலர்களால் நீடித்த இலக்குகள் தொடர்பான தரவுகள் 21 துறைகளிடமிருந்து பெறப்பட்டு, நீடித்த நிலையான வளர்ச்சி குறியீட்டுக்கான இணையதளம் மூலம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியினை வட்டார அளவில் மேற்கொள்வதற்கு வசதியாக வட்டார அளவில் ஒருங்கிணைப்புக் குழு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் அனைத்து வட்டாரங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார அளவில் குறியீடுகள் பெறுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கணினியில் பதிவு

மேலும் மாநில அரசு மாவட்டங்களின் வளர்ச்சியினை கண்டறிய "மாவட்ட நல்லாட்சி குறியீடுகள்" அடிப்படையில் மாவட்டங்களை தரவரிசை படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்காக 2020-2021- ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு 75 மாவட்ட நல்லாட்சி குறியீடுகள் தொடர்பான புள்ளி விவரங்களை சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து பெற வசதியாக கூட்டம் நடத்தப்பட்டு, இதன்மூலம் பெறப்பட்ட தரவுகளை கணினி பதிவு மேற்கொண்டு பொருளியல் மற்றும் புள்ளியியல்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரதிவிராஜ், நீடித்த வளர்ச்சி இலக்குகள் ஆலோசகர் சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் முருகண்ணன், மாவட்ட ஊராட்சி செயலர் ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story