தனியார் கம்பெனியில் ரூ.4 லட்சம் பொருட்கள் திருடிய 5 ஊழியர்கள் கைது
சோளிங்கரில் தனியார் கம்பெனியில் ரூ.4 லட்சம் பொருட்கள் திருடிய 5 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் ஊராட்சி பகுதியில் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு புலிவலத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 30), வன்னியவேடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (45), வாங்கூரை சேர்ந்த வெங்கடேசன் (63), வாலாஜா கே.கே. நகரை சேர்ந்த தனசேகரன் (53), ஆர்.கே. பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் (52) ஆகியோர் கூலிவேலை செய்து வருகின்றனர். இவர்கள் நேற்று கம்பெனியில் உள்ள இரும்பு பொருட்களை வேனில் ஏற்றி உள்ளனர். அப்போது ரூ.4 லட்சம் மதிப்புள்ள கம்பெனிகத்கு தேவையான பொருட்களை திருடி வேனில் ஏற்றி செல்ல முயன்றுள்ளனர்.
அதனை பாதுகாப்பு பணியில் இருந்த ரமேஷ் என்பவர் கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்து வாகனத்தை சோதனை செய்த போது ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அதில் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களை 5 பேரையும் பிடித்து கொண்டபாளையம போலீசாரிடம் ஒப்படைத்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் கொண்டபாளையம் போலீசார் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.