குமரியில் மழைக்கு 5 வீடுகள் இடிந்தன
குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 69.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழைக்கு 5 வீடுகள் இடிந்துள்ளன.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 69.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழைக்கு 5 வீடுகள் இடிந்துள்ளன.
தொடர் மழை
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மலையோரம் மற்றும் நீா்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அனைத்து அணைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கண்காணித்து அதற்கு ஏற்ப அணையில் இருந்து கூடுதலாக தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
தற்போது அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆறு மற்றும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன்படி குழித்துறை தாமிரபரணி ஆறு, கோதையாறு ஆகியவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியிலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க நேற்று 7-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.
5 வீடுகள் சேதம்
தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 2,040 குளங்களில் 14 சதவீத குளங்கள் நிரம்பி மறுகால் பாயத்தொடங்கியது. மேலும் செங்கல் சூளை, ரப்பர் உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளிகள் கவலை அடைந்துள்ளனர்.
மழைக்கு மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களில் மட்டும் 5 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. அதாவது நாகா்கோவில் கம்பளம் பகுதியில் 3 வீடுகளும், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் தாலுகாக்களில் 2 வீடுகளும் இடிந்துள்ளன. இடிந்து விழுந்த நாகர்கோவிலில் உள்ள பழைய வீடுகளில் ஆட்கள் யாரும் வசிக்கவில்லை. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதேபோல் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மாவட்டம் முழுவதும் 4 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
மயிலாடியில் 69.2 மி.மீட்டர் மழை
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பேச்சிப்பாறை அணை-53.8, பெருஞ்சாணி அணை-20, புத்தன் அணை- 19.2, சிற்றார் 1- 11.2, சிற்றார் 2- 21.6, மாம்பழத்துறையாறு அணை- 19, முக்கடல் அணை-3, பூதப்பாண்டி- 11.2, களியல்- 2.4, கன்னிமார்- 18.6, கொட்டாரம்- 18.4, குழித்துறை- 14, நாகர்கோவில்- 34.8, சுருளக்கோடு- 18.6, தக்கலை- 23.2, குளச்சல்- 4.4, இரணியல்- 8, பாலமோர்- 38.2, ஆரல்வாய்மொழி- 27, கோழிப்போர்விளை- 37.6, அடையாமடை- 31, குருந்தங்கோடு- 5.2, முள்ளங்கினாவிளை- 18.6, ஆனைக்கிடங்கு-17 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக மயிலாடியில் 69.2 மி.மீ. அளவுக்கு மழை பெய்திருந்தது.
அணைகளுக்கு நீர்வரத்து
நேற்று முன்தினம் மாலை பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 5,466 கனஅடி தண்ணீர் வந்தது. அது நேற்று காலை வினாடிக்கு 1,077 கனஅடியாக உள்வரவு குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 546 கனஅடி நீர் உபரியாக திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 1,136 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,020 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டன.
இதேபோல் சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 56 கனஅடி நீரும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 84 கனஅடி நீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 5 கனஅடி நீரும், முக்கடல் அணைக்கு வினாடிக்கு 6.6 கனஅடி நீரும் வந்தது. முக்கடல் அணையில் இருந்து 8.6 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.