பள்ளிக்கு 5 கி.மீ. தூரம் நடந்து செல்லும் மாணவ-மாணவிகள்


பள்ளிக்கு 5 கி.மீ. தூரம் நடந்து செல்லும் மாணவ-மாணவிகள்
x

பள்ளிக்கு 5 கி.மீ. தூரம் மாணவ-மாணவிகள் நடந்து செல்கின்றனர்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி:

40 ஆண்டுகளாக...

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கருப்பகோன் தெரு கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தொடக்கக்கல்வி கற்கும் 50 மாணவர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்த கிராமத்தில் உள்ளனர். இந்த கிராமத்தில் அரசு பள்ளி இல்லாததால் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முள்ளங்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் அந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

கருப்பகோன் தெரு கிராமத்தில் தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் தொடக்கக்கல்வி கற்கவே இளம் வயது மாணவர்கள் 5 கி.மீ. தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது.

அச்சத்துடன் செல்கின்றனர்

இதனால் பள்ளிக்கு நடந்து சென்று, திரும்பும் நிலையில் மாணவர்கள் சோர்வடைவதால், பள்ளிக்கு சரிவர செல்வதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கிராமத்தில் பஸ் வசதி மற்றும் முறையான சாலை வசதி இல்லாததால் இப் பகுதியில் உள்ள அனைத்து மாணவர்களும் பள்ளி செல்ல தைலமரக்காட்டின் வழியாக ஆபத்தான முறையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. மாலை நேரத்தில் மாணவிகள் அச்சத்துடன் இவ்வழியில் சென்று வருகின்றனர்.

இந்த கிராமத்தில் இருந்து கோட்டைக்காடு கிராமத்திற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. மேலும் அந்த சாலையில் உள்ள தரைப்பாலம் வலுவிழந்து, சிதிலமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கோரிக்கை

எனவே கருப்பகோன் தெரு கிராமத்தில் தொடக்கப்பள்ளி அமைக்கவும், மாணவ-மாணவிகளின் நலன் கருதி சாலை மற்றும் பஸ் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story