பகுதிநேர வேலை தருவதாக கூறி வேலூர் பெண்ணிடம் ரூ.5 லட்சம் அபேஸ்
பகுதிநேர வேலை தருவதாக கூறி வேலூர் பெண்ணிடம் ரூ.5 லட்சத்து 48 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பகுதிநேர வேலை தருவதாக கூறி வேலூர் பெண்ணிடம் ரூ.5 லட்சத்து 48 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பகுதி நேர வேலை
வேலூரை சேர்ந்த 35 வயது கொண்ட பெண் ஒருவரின் செல்போனுக்கு கடந்த 2-ந் தேதி குறுந்தகவல் ஒன்று வந்தது. அந்த குறுந்தகவலில் பகுதி நேர வேலை தேடுபவரா?, உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. தினமும் அதிக வருமானம் பெறலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த குறுந்தகவலில் இணையதள லிங் ஒன்றும் இருந்தது.
இதை நம்பிய அந்த பெண் அந்த லிங்கில் சென்று தனது விவரங்களை பதிவு செய்து கணக்கு தொடங்கினார். பின்னர் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட மர்மநபர் சில பொருட்களை வாங்கி, விற்பனை செய்தால் அதிக லாபத்துடன் பணம் வழங்கப்படும் என்று கூறினார். எனவே அந்த பெண் ரூ.200, ரூ.300 என தொடர்ந்து செலுத்தி வந்தார்.
இதேபோல பல பொருட்கள் வாங்க வேண்டும் அதற்கு கூடுதலாக பணம் செலுத்த வேண்டும். இது ஒருவகையான போட்டி அதை நீங்கள் முடிக்க வேண்டும் என்று மீண்டும் அந்த மர்மநபர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம் என பணத்தை செலுத்தி உள்ளார்.
அந்த பெண் எப்போது எனக்கு பொருட்கள் அனுப்பி வைப்பீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மர்மநபர் அனைத்து பொருட்களுக்கும் பணம் செலுத்த வேண்டும் என்று கூறினார். இதையடுத்து அந்த பெண் ஒரேவாரத்தில் மொத்தம் ரூ.5 லட்சத்து 48 ஆயிரத்து 359 வரை செலுத்தி உள்ளார். இதையடுத்து அந்த நபரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. தனது பணத்தை அந்த நபர் அபேஸ் செய்ததும் அவருக்கு தெரியவந்தது.
போலீசில் புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கண்ணீருடன் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரின் வங்கிக்கணக்குகளை ஆய்வு செய்தனர். அந்த வங்கிக்கணக்கில் இருந்து பணம் வெவ்வேறு வடமாநிலங்களில் உள்ள பல்வேறு வங்கிக்கணக்குக்கு சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார் பணத்தை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், மர்மநபர்கள் போலியான வங்கிக்கணக்குகளை பயன்படுத்தி வெவ்வேறு வங்கிக்கணக்குகளை மாற்றி விடுகின்றனர். உடனடியாக அந்த பணத்துக்கு பொருட்கள் வாங்கிவிடுகின்றனர். அல்லது பணத்தை வங்கியில் இருந்து எடுத்து விடுகின்றனர். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பகுதி நேர வேலை மூலம் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று வரும் குறுந்தகவல், பிரபல நிறுவனத்தில் உங்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்று வரும் குறுந்தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். ஆசைக்காட்டி மோசம் செய்யும் நபர்களிடம் பணத்தை பறி கொடுக்க வேண்டாம் என்றனர்.