தீயணைப்பு துறையினருக்கு ரூ.5½ லட்சத்தில் மீட்பு பணி கருவிகள்


தீயணைப்பு துறையினருக்கு ரூ.5½ லட்சத்தில் மீட்பு பணி கருவிகள்
x

தீயணைப்பு துறையினருக்கு ரூ.5½ லட்சத்தில் மீட்பு பணி கருவிகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தீயணைப்பு துறையின் மூலம் பயன்படுத்தப்படும் மேம்படுத்தப்பட்ட கருவிகளை கொண்டு பொதுமக்களை பேரிடர்களிலிருந்து மீட்கும் வகையில் மாவட்ட கலெக்டரின் தன்விருப்ப நிதி மற்றும் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 2 எண்ணிக்கையிலான விபத்து மற்றும் மீட்பு பணியின் போது இரும்பு கம்பிகளை சுலபமாக வெட்டும் கருவி ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 200 மதிப்பீட்டிலும், மேலும் 2 எண்ணிக்கையிலான நீர் நிலைகள் மற்றும் கிணற்றுக்குள் மூழ்கி தவிப்பவர்களை தெரிந்துகொள்வதற்கான கேமரா, 2 எண்ணிக்கையிலான வெள்ளம் சூழ்ந்த இடங்களிலிருந்து நீரினை வெளியேற்றும் கருவி ஆகியவை ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 876 மதிப்பீட்டிலும் வாங்க பெற்றுள்ளது.

இதேபோல் புகை சூழ்ந்த நிலையில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் கருவி ரூ.75 ஆயிரத்து 40 மதிப்பீட்டிலும், 5 எண்ணிக்கையிலான கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்கும் வகையில் கான்கிரீட் தளங்கள் மற்றும் இரும்புகளை அகற்றும் கருவி ரூ.21 ஆயிரம் மதிப்பீட்டிலும், 11 எண்ணிக்கையிலான பாம்பு பிடிக்கும் கருவி, 11 எண்ணிக்கையிலான முழு கவச உடை ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 435 என மொத்தம் ரூ.5 லட்சத்து 56 ஆயிரத்து 551 மதிப்பிலான 34 கருவிகள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையிடம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கவிதாராமு நேற்று ஒப்படைத்தார். இக்கருவிகளை முழுமையாக பயன்படுத்தி பேரிடர் காலங்களில் பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் உடைமைகளை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பாதுகாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். தீயணைப்பு துறையினருக்கு நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு வீரர்களை கலெக்டர் கவிதாராமு பாராட்டினார். இந்தநிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா, பேரிடர் மேலாண்மை தாசில்தார் சூரியபிரபு மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story