ரூ.5 லட்சம் சந்தன கட்டைகள் பறிமுதல்
குடியாத்தம் அருகே மோட்டார்சைக்கிளில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள சந்தன கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.
சந்தன கட்டைகள் கடத்தல்
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில், குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, காவலர்கள் மோசஸ், சுரேஷ் உள்ளிட்ட போலீசார் நேற்று அதிகாலை குற்றத்தடுப்பு மற்றும் மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக ரோந்து சென்றனர். குடியாத்தம் அடுத்த இந்திராநகர் கவுண்டன்யா மகாநதி ஆற்றோரம் சென்றபோது அங்கு மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஒருவர் நின்றிருந்தார்.
அவர் அருகில் சென்ற போலீசார் அந்த நபரை படம் எடுக்க முயற்சித்துள்ளனர். உடனே அவர் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு இருட்டில் தப்பி ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் ஒரு மூட்டையில் 9 சந்தனமர கட்டைகளும், அதை வெட்ட பயன்படுத்திய கத்தி, ரம்பம் ஆகியவையும் இருந்துள்ளது.
அவற்றை போலீசார் கைப்பற்றி குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிளின் நம்பரை வைத்து விசாரணை நடத்தினர்.
ஆந்திராவை சேர்ந்தவர்
விசாரணையில் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் குடியாத்தத்தை அடுத்த சாமியார்மலை சோனியாநகர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ் என்பவருக்கு சொந்தமானது என்பதும், நேற்று முன்தினம் சந்தோஷ் மனைவி சாந்தியிடம், அவருக்கு தெரிந்த ஆந்திர மாநிலம் பலமநேர் அடுத்த முசலமடுகு கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் மோட்டார்சைக்கிளை வாங்கி சென்றதும் தெரியவந்தது.
இதனால் குமாருக்கு மோட்டார்சைக்கிளை கொடுத்த சந்தோஷ் என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.5 லட்சம்
மேலும் மேல்நடவடிக்கைக்காக சந்தனமரக் கட்டைகளையும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் குடியாத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட சந்தனக்கட்டைகள் 100 கிலோவுக்கு மேல் இருக்கும் எனவும், இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
சந்தன மரக்கட்டைகளை பிடித்த குடியாத்தம் டவுன் போலீசாரை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் பாராட்டினர்.