52 பயனாளிகளுக்கு ரூ.5½ லட்சம் நலத்திட்ட உதவிகள்
திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 52 பயனாளிகளுக்கு ரூ.5½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.
மக்கள் குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். மொத்தம் 343 மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நலத்திட்ட உதவி
கூட்டத்தில் தமிழ்ப் பழங்குடி குறவன் சங்கம் சார்பில் அளித்துள்ள மனுவில் சாதிச்சான்றிதழ் கேட்டு 8 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினோம். உங்களது உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை கைவிட்டோம். தற்போது ராச்சமங்கலம், பஞ்சனம்பட்டி ஆகிய கிராமங்களில் மட்டும் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை ஒருவருக்குக் கூட சான்றிதழ் வழங்கவில்லை. எனவே இதன்மீது தனிகவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
பின்னர் கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் பல்வேறுதுறைகளின் சார்பில் 52 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, மானிய கடன், முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, வேளாண்மை இணை இயக்குநர் பாலா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் விஜயகுமாரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரேவதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.