வங்கி முகவரிடம் ரூ.5 லட்சம் 'அபேஸ்'
சாணார்பட்டியில் வங்கி முகவரிடம், ரூ.5 லட்சம் அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சாணார்பட்டி அருகே உள்ள கொசவபட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 46). இவர், சாணார்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் வர்த்தக முகவராக பணிபுரிகிறார். தினமும் இவர் வங்கியில் பணம் எடுத்து முதியோர் உதவித்தொகை, பால் முகவர்கள், 100 நாள் வேலை செய்பவர்களுக்கு வழங்கி வருகிறார்.இந்தநிலையில் நேற்று காலை 11 மணி அளவில், சாணார்பட்டி தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை பெற்றார். அதனை, தனது மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்தார்.
பின்னர் அங்குள்ள டீக்கடையில் டீ குடித்தார். சிறிதுநேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்தபோது, தான் வைத்திருந்த இடத்தில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் 'அபேஸ்' செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் சரவணக்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர்பவுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை ஆய்வு செய்து, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.