தூத்துக்குடி கடலில் 5 லட்சம் முத்துசிப்பி குஞ்சுகள் விடப்பட்டன


தூத்துக்குடி கலெக்டர், விஞ்ஞானிகள் படகில் சென்று கடலில் 5 லட்சம் முத்துசிப்பி குஞ்சுகளை விட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி கலெக்டர், விஞ்ஞானிகள் படகில் சென்று கடலில் 5 லட்சம் முத்துசிப்பி குஞ்சுகளை விட்டனர்.

முத்துசிப்பி

தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் சார்பில் முதிர்ந்த முத்துசிப்பிகளை கடலில் இருந்து சேகரித்து வந்து இருந்தனர். அதனை இனப்பெருக்கம் செய்து, ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள பொரிப்பகத்தில் 5 லட்சம் குஞ்சுகளை உருவாக்கி உள்ளனர். இந்த முத்து சிப்பி குஞ்சுகள் 5 மில்லி மீட்டர் அளவுக்கு வளர்த்து உள்ளன. இதனை கடலில் விடும் நிகழ்ச்சி நேற்று காலை தூத்துக்குடி சுனாமிநகர் சமுதாய கூடத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய பொறுப்பு விஞ்ஞானி பி.எஸ்.ஆஷா வரவேற்று பேசினார். திட்டம் குறித்து விஞ்ஞானி கவிதா விளக்கி கூறினார். பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் விஞ்ஞானிகள் படகில் கடலுக்குள் சென்று முத்துசிப்பி குஞ்சுகளை கடலில் விட்டனர்.

மாற்ற வேண்டும்

நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசியதாவது:-

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளேன். முத்துக்கு பெயர் பெற்ற மாவட்டம் தூத்துக்குடி. இந்த மாவட்டத்தில் முத்துக்கள் இல்லை என்று நினைக்கும் போது, வருத்தமாக உள்ளது. இதனை மீட்டெடுக்கவும், மீண்டும் முத்து நிறைந்த கடற்கரையாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டோம். அதன்படி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் முத்துசிப்பிகளை சேகரித்து வளர்த்து, குஞ்சுகளை உற்பத்தி செய்து உள்ளனர்.

அதன்படி ஒரு வருடமாக குஞ்சுகளை உருவாக்கி உள்ளனர். 5 மில்லி மீட்டர் அளவுக்கு வளர்ந்த 5 லட்சம் முத்துசிப்பி குஞ்சுகளை சுனாமிநகர், கீழவைப்பார் ஆகிய பகுதிகளில் கடலில் விடப்படுகின்றன. இந்த முத்து சிப்பி குஞ்சுகள் விடும் இடங்களை பாதுகாக்க வேண்டும். அந்த பகுதிகளில் அதிக அளவில் மீன்பிடிக்காமல் மீனவர்கள் பாதுகாக்க வேண்டும்.

இதன் மூலம் தூத்துக்குடியின் பழம் பெருமையை மீட்கலாம். மீனவர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும். மீனவர்கள் முத்துசிப்பி உள்ள இடங்களில் மீன்பிடிக்காமல் திட்டத்தை வெற்றிகரமாக மாற்ற வேண்டும். இன்னும் ஒரு வருடத்தில் முத்து குளிக்கும் நகரமாக தூத்துக்குடியை மாற்ற வேண்டும். தற்போது 6 கூண்டுகளிலும், பாறைகள் நிறைந்த இடத்திலும் இந்த முத்து சிப்பி குஞ்சுகள் விடப்படுகின்றன. கூண்டுகளில் விடப்படும் குஞ்சுகள் மூலம் அதன் வளர்ச்சிதொடர்ந்து கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார், மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் விஜயராகவன், வயோலா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story