சுதந்திர தினத்தையொட்டி திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
சுதந்திர தினத்தையொட்டி திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாகன சோதனை
நாட்டின் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருச்சி விமானநிலையம், ரெயில்வே ஜங்ஷன், 6 ரெயில் நிலையங்கள், 2 பஸ் நிலையங்கள், 10 முக்கிய கோவில்கள், தேவாலயங்கள், தலைவர்களின் சிலைகள், பள்ளிவாசல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்காணிக்கவும், 17 முக்கிய இடங்கள், 9 சோதனை சாவடிகள் ஆகிய இடங்களில் வாகன சோதனை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
5 அடுக்கு பாதுகாப்பு
திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பின்பு அனுமதித்து வருகின்றனர். விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் தமிழக போலீசார் சோதனை செய்யப்பட்ட பின்பு வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றது. அதற்கு அடுத்தபடியாக விமான நிலைய வாகனங்கள் நிற்கும் இடத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக விமான நிலைய நுழைவு வாயிலில் மோப்பநாய் உதவியுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர். மேலும் பயணிகளின் உடைமைகளை ஸ்கேனர் கருவிக்கொண்டு சோதனை செய்யப்பட்ட பின்பு முனைய வளாகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர். இந்த சோதனை நாளை வரை நீடிக்கும் என்று மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
இந்த பணிகளை விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் ஆகியோர் கொண்ட குழுவினர் மேற்பார்வையிட்டு வருகின்றனர். சுதந்திர தினத்தையொட்டி இன்று (செவ்வாக்கிழமை) காலை 9 மணி அளவில் விமான நிலைய இயக்குனர் கொடியேற்றுகிறார்.
ஆயுதப்படை வளாகம்
சுதந்திர தினவிழா நடைபெறும் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு போலீஸ் கமிஷனர் காமினி தலைமையில், போலீஸ் துணை கமிஷனர்கள், மாநகர ஆயுதப்படை கூடுதல் துணை கமிஷனர், 6 போலீஸ் உதவி கமிஷனர்கள், 40 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என திருச்சி மாநகரத்தில் 867 போலீசார் நேற்று முன்தினம் முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் திருச்சி மாவட்டத்திலும் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.