கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது: கடத்தப்பட்ட ரவுடி 5 பெண்களுடன் குடும்பம் நடத்தியது அம்பலம் போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்


கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது:  கடத்தப்பட்ட ரவுடி 5 பெண்களுடன் குடும்பம் நடத்தியது அம்பலம்  போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 5 Nov 2022 2:00 AM IST (Updated: 5 Nov 2022 2:01 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ரவுடி கடத்தல் வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கடத்தப்பட்ட ரவுடி 5 பெண்களிடம் குடும்பம் நடத்தியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

சேலம்

சேலம்,

ரவுடி கடத்தல் வழக்கு

சேலம் அழகாபுரம் பிருந்தாவன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பூபதி. பிரபல ரவுடியான இவரும், அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவரும் நண்பர்கள். இவர்களை கடந்த 1-ந் தேதி ஒரு கும்பல் கடத்தி சென்றது. ஆனால் அவர்களிடம் இருந்து பிரவீன்குமார் தப்பித்துவிட்டார்.

இதுகுறித்து புகாரின்பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் திருவண்ணாமலை பகுதியில் இறக்கி விடப்பட்ட ரவுடி பூபதியை தனிப்படை போலீசார் மீட்டு சேலத்திற்கு அழைத்து வந்தனர்.

கூலிப்படையை ஏவி ரவுடி கடத்தலில் ஈடுபட்டதாக சேலத்தை சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர் ஏகாம்பரம், அவரது கடை மேலாளர் பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதேசமயம், 10 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்து தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக நகைக்கடை உரிமையாளர் ஏகாம்பரம் கொடுத்த புகாரில் ரவுடி பூபதியை போலீசார் கைது செய்தனர்.

5 பேர் கைது

இந்த நிலையில் கூலிப்படையை சேர்ந்த எஸ்.கொல்லப்பட்டி ஏரிக்காட்டை சேர்ந்த கூலிப்படை தலைவன் பிரபாகரன் (29), அன்னதானப்பட்டியை சேர்ந்த யுவராஜ் (28), கருப்பூர் கவுதம் (30), மூனாங்கரட்டை சேர்ந்த மணிமாறன் (32), குகையை சேர்ந்த நவீன்குமார் (33) ஆகிய 5 பேரையும் நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் ரெட்டிப்பட்டி பகுதியில் நடந்து சென்ற கருப்பசாமி என்பவரை மிரட்டி பணத்தையும் பறித்து சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், தொடர்ந்து தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்த மேட்டூர் பிரகாஷ், விஜி உள்பட 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

5 பெண்களுடன் குடும்பம் நடத்திய ரவுடி

போலீசார் நடத்திய விசாரணையில் கைதான ரவுடி பூபதி குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

கைதான பூபதி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவருக்கு பல்வேறு நபர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவரிடம் இருந்து 2 கார், 4 சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பூபதியிடம் பண பழக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் பெண்களிடமும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். இவருடைய முதல் மனைவி காயத்ரி விவாகரத்து வாங்கிக்கொண்டு பிரிந்து சென்றுவிட்டார்.

அதன்பிறகு 2 பெண்களுடன் ரவுடி பூபதி குடும்பம் நடத்தி வந்ததாகவும், பின்னர் மருத்துவ மாணவி ஒருவருடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் 3 பேரும் பிரிந்து சென்றுவிட்டனர். தற்போது பெண் கிராம நிர்வாக அலுவலர் ஒருவரை திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ரவுடி பூபதி மீது மோசடி வழக்கில் பிடிக்க சென்ற மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பி சென்ற வழக்கு, மோசடி வழக்கு, பெண்ணை தாக்கியது உள்பட 7 வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story