நன்னடத்தை பிணையை மீறியவருக்கு 5 மாதம் சிறை
நெல்லை அருகே நன்னடத்தை பிணையை மீறியவருக்கு 5 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
நெல்லை அருகே உள்ள தருவை கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் என்ற குமார் (வயது 28). இவருக்கு பாளையங்கோட்டை இரண்டாம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவரால், ஒரு வருட காலத்திற்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது. அதன் பின்பு கடந்த 16-ந் தேதி அந்த பகுதியைச் சேர்ந்த வல்லபாண்டியன் என்பவர் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய லாரியில் கொண்டு சென்றபோது அவரை வழிமறித்து அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் நன்னடத்தை பிணையை மீறி குமார் குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், பாளையங்கோட்டை இரண்டாம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர் ஆனந்த்பிரகாஷ் முன்பு அறிக்கை சமர்ப்பித்தார். இதன் மீது விசாரணை நடத்திய நடுவர், பிணையை மீறி குற்றம் புரிந்ததற்காக ராஜேஸ்வரன் என்ற குமாருக்கு 5 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.